‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’: யாழில் சுற்றாடல் தின நிகழ்வு

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வொன்றை வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். கோட்டையை அண்மித்த பண்ணை கடற்கரை பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

யாழ். மாவட்ட இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், இச்செயற்றிட்டத்தினூடாக யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் நான்காயிரம் மரக்கன்றுகளை இவ்வாரத்தில் நாட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor