கிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்

கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி தனது மோசமான செயலை வெளிக்காட்டியுள்ளதால் அவ்வணியின் தலைவர் ஸ்மித், உபதலைவர் வோர்னர் ஆகியோர் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன் அணித் தலைவருக்கு அபராதமும் போட்டித் தடையும் மற்றைய வீரரான போன்கிராப்ட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கே இவ்வாறு அபராதமும் தடையும் மேற்கண்ட வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 3 ஆவது நாள் ஆட்டத்தின்போது தென்னாபிரிக்க அணி துடுப்படுத்தாடிக் கொண்டிருந்தது.

அப்போது களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் போன்கிராப்ட், அவரது நீளக்காற்சட்டை பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து பந்தின் மீது தேய்த்தார்.

இது கேமராவில் தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து நடுவர் அழைத்து போன்கிராப்ட் இடம் விசாரித்தார். நடுவர் அழைத்ததும் அந்த பொருளை அவர் தனது நீளக் காற்சட்டையை கழற்றி பிறப்புறுப்பு இருக்கும் பகுதிக்குள் வைத்தார்.

போன்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கான அந்த பொருளை பயன்படுத்தினார் என்று சராமரியாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் ஊடகவியலாளர்களை சந்த்தித்தார்.

அப்போது பந்தை சேதப்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். அத்துடன் தனக்கு இது தெரியும் என்றார். இதனால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அதிர்ச்சியடைந்தது. அவுஸ்திரேலியா பிரதமரும் அது தொடர்பில் கவலை தெரிவித்தார். அத்துடன் அணித் தலைவர் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் அணித் தலைவர் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டனர். இதனால் இருவரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். டிம் பெய்ன் எஞ்சிய போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில் அணித் தலைவர் ஸ்மித்திற்கு இந்த டெஸ்டின் சம்பளம் அனைத்தையும் அபராதமாக (100 சதவீதம்) விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது. இதனால் ஜோகன்னஸ் பேர்க்கில் நடைபெறவுள்ள இறுதி டெஸ்டில் ஸ்மித் பங்கேற்க வாய்ப்பில்லை.

இந்த விவகாரத்திற்கு காரணமான போன்கிராப்ட்டிற்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், ஐ.சி.சி. விதிமுறையின் சரத்து 2-ஐ மீறியதற்காக மூன்று மறைப்புள்ளிகளையும் ஐ.சி.சி. வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor