83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது! – வடக்கு முதலமைச்சர்

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றதோ என தாம் சந்தேகிப்பதாக வடமாகாண முதல்வர க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Vickneswaran-cm

அத்துடன், குறித்த வன்முறைச் சம்பவங்கள் உண்மையில் இனங்களுக்கிடையில் விரிசலினை உருவாக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையில் நடைபெற்றிருக்குமானால் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, அளுத்கம பகுதியில் கடந்த சில தினங்களாக சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் உருவாகியிருக்கும் முறுகல் நிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விபரங்களையும் நான் அறிந்திருக்கவில்லை.

எனவே அந்த விடயம் தொடர்பாக ஆழமான முறையில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் தற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு பல பாதிப்புக்கள் உண்டாக்கப்படுவதை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் முஸ்லிம் மக்களுடைய தலைவர் இவ்விடயங்கள் தொடர்பாண உணர்ந்துதான் செயற்படுகின்றார்களா என தெரியவில்லை.

மேலும் 83ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு நடந்ததைப் போன்றே இப்போது முஸ்லிம் மக்களுக்கும் நடக்கின்றதா? என நாம் சந்தேகிக்க வேண்டியதாக இருக்கின்றது.

நான் சிறுவனாக இருந்த போது அதாவது சுதந்திரமடைவதற்கு முன்னர், தமிழ் மக்கள் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்திருந்தார்கள்.

அப்போது யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். வாழ முடியும். என்ற நிலையே காணப்பட்டது.

பின்னர் தெற்கிலிருந்து தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அவ்வாறான ஒரு செயற்பாடே இன்றைக்கும் நடப்பதாக உணர்கின்றோம்.

எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம் – சிங்கள மக்களுக்கிடையில் இன விரிசலை உண்டாக்கும் வகையில் அல்லது முஸ்லிம் இனத்தவர்களை முழுமையாக பாதிப்படையச் செய்யும் வகையில் மேற்படி வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டிருக்குமானால் நாங்கள் அதனை வன்மையாக கண்கிக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க வலியுறுத்துவோம் என்றார்.

Related Posts