ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி யாழ். நல்லூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட பிரதேசங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் முகமாக வீதிகளில் இறங்கி போராடும் தமிழக உறவுகளுக்கு ஆதரவாக இன்று யாழ்ப்பாணத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக நண்பர்களே விடாமல் போராடுங்கள், காளை எங்களது வீரம், எங்களது காயமும் எங்களுக்கு, கண்ணீர் ஏன் உனக்கு? தமிழன் என்று சொல்லடா தல நிமிர்ந்து நில்லடா? நல்லூரி சூரசங்காரம் சுப்பிரமணிசாமிக்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு இளைஞர்கள், யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor