ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக கனடா அரசு அறிவிப்பு

ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

canada

இதனால் அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரது கை தட்டல்களுக்கு நடுவே இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.

எம்-24 என்று பெயரிடப்பட்ட இந்தத் தீர்மானத்தில், “வரும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கனடா சமுதாயத்துக்காக கனடா வாழ் தமிழர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

கனடாவின் ஸ்கார்பரோ-ரோக் பார்க் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரி இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதுகுறித்து கடந்த மே 20, செப்டம்பர் 29-ம் திகதிகளில் விவாதம் நடைபெற்றது. கடந்த 5-ம் திகதி இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடாவில் வாழும் தமிழர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்” என கூறப்பட்டுள்ளது.

கடந்த 1983-ல் கனடாவில் வெறும் 150 தமிழர்கள் மட்டுமே வசித்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 3 இலட்சத்தைத் தாண்டி விட்டதாக புள்ளி விவரம் கூறுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor