யாழ் பல்கலையில் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு

இவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில், 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாட்டின் கருப் பொருளாக, ‘முழு உலகினதும் முக்கிய கவனத்தை ஈர்த்திருக்கக் கூடியதும் ஆய்வாளர்களின் தேடலுக்கு களம் சமைத்திருப்பதுமான’ “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” என்ற களத்தை இம்முறை தேர்வு செய்திருக்கிறது.

உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும், சவால்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சூழல் குறித்த பிரக்ஞைகளின் பால் தனது தேடலை அமைத்திருக்கும் இந்த ஆய்வு மாநாடு, கடந்த காலங்களில் பசுமைச் சூழலிருந்து விலகிச் சென்றமைக்கான காரணங்களைத் தேடும் அதே வேளை, இன்றைய நிலையில் பசுமைத் தேவையின் அவசியங்களை நோக்கி மானுட சமூத்தை நகர்த்திச் செல்லும் முயற்சிகளுக்கு இந்த ஆய்வு மாநாடு கவனம் செலுத்தவிருக்கின்றது. வெவ்வேறு துறைகள் சார்ந்தும் சூழல் குறித்த கரிசனங்களை தனது ஆய்வுப் பகுதிக்குள் உள்ளடக்கியிருப்பது இந்த மாநாட்டின் சிறப்பாகும்.

இந்த வகையில் மானுடவியல் மற்றும் நுண்கலைகள், விளையாட்டு விஞ்ஞானம், தூய விஞ்ஞானம், வர்த்தகம், முகாமைத்துவம், மற்றும் தொழில்வான்மை, விவசாயம் மற்றும் உணவு விஞ்ஞானம், கல்வி, பொறியியல், சுகாதாரம், மற்றும் மருத்துவம், சமூக விஞ்ஞானம், மற்றும் பிராந்திய விஞ்ஞானம், உயிரியல், மற்றும் சூழல் விஞ்ஞானம், தகவல் விஞ்ஞானம், மற்றும் தொழினுடபம், ஆகிய துறைகளினூடாக பசுமையான எதிர்காலத்தை நோக்கிய ஆய்வரங்குகள் இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளன.

இதுவரை , இந்த மாநாட்டிற்கென 75 க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையானவை வௌிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றிருப்பது, ஆய்வாளர்கள் மத்தியில் மாநாடு பெற்றிருக்கக்கூடிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்த ஆய்வுக் கட்டுரைகள் யாவுமே சர்வதேச ஆய்வு நியமங்களுக்கு அமைவாக நிபுணர்களின் பரிசீலணைக்குட்பட்டே தெரிவாகியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வகையில் இவ் மாநாட்டின் அதிதிப் பேச்சாளர்களாக, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரேச்சல் ரிரைப் மாநாட்டின் தொடக்கவுரையை வழங்கவிருக்கிறார். பிரிட்டிஷ் உளவியல் சமூகத்தின் புலமைப் பேற்றாளரான பேராசிரியர் ரேச்சல் ரிரைப், ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை – உள ஆற்றுப்படுத்துநர் குழாமில் கடந்த 20 வருடங்களாக, அதன் தொடக்க காலத்திலிருந்தே பணியாற்றி வருபவராவார். பட்டயம் பெற்ற உளவள நிபுணரான பேராசிரியர் ரேச்சல் பொதுமக்களுக்கும் தன்னார்வ அடிப்படையிலும், கல்வி சார்ந்தும் தனது சேவைகளை வழங்கி வருகிறார். தற்போது கிழக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ரேச்சல் – பண்பாடு மற்றும் உள ஆரோக்கியம், உளப் பாதிப்புக்கள், உள ஆற்றுப் படுத்தலில் தொழில் மற்றும் அறநெறிசார் பயிற்சிகள் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவராவார்.

மாநாட்டின் கருத்துரைகளை – அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் கூடாலி மற்றும் கலாநிதி ஆறுமுகம் கந்தையா ஆகியோர் வழங்கவிருக்கின்றனர். பேராசிரியர் ரஞ்சித் கூடாலி அமெரிக்காவின் மிகப் பிரபலமான சௌத் டகோடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை ஐ.ஐ.ரி யில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்ட இவர் விருதுகள் பெற்ற ஆய்வாளராவார். இரசாயணத் துறைசார் பின்புலத்தைக் கொண்ட இவர் மாநாட்டில் ‘நீடித்த எதிர்காலத்திற்கு நனோபோரஸ் பிரயோகம்’ என்னும் தலைப்பில் கருத்துரையாற்றவிருக்கிறார்.

‘பசுமை உணவு உற்பத்தி முறைமையை நோக்கி ‘ என்ற தலைப்பில் கருத்துரையாற்றவிருக்கும் கலாநிதி ஆறுமுகம் கந்தையா – ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலக வங்கி, பூகோள சூழல் அனுசரணை உட்பட பல்தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களில் ஆலோசகராகப் பணியாற்றியவராவார். இவர், தனது நீர்வள முகாமைத்துவத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச மாநாட்டில் இதுவரை 150 க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் தமது பதிவை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை மாநாட்டின் ஆரம்ப தினத்திலும் ஆர்வமுள்ளோர் தமது பங்கேற்புப் பதிவுகளைச் செய்து கொள்ள ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

ஆய்வரங்குகளிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்பதுடன், மாநாட்டின் பெறுதிகளை ஆக்கபூர்வமாக்கிக் கொள்வதற்காக – ஆர்வமுள்ளோர், புலமையாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஊக்கத்துடனான பங்கேற்பு இன்னமும் சிறப்பைச் சேர்க்கும்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பசுமையான எதிர்காலத்தின் அவசியத்தை அனுபவித்த உணர்ந்த மக்கள் வாழக்கூடிய நிலப்பரப்பில் இத்தைகைய ஆய்வரங்கின் தேவையை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு – 2016, தனது பெறுதிகள் மூலம் எடுத்துக் காட்டும் என்ற உறுதியான நம்பிக்கை மலரட்டும். அது புதிய சிந்தனைகளையும் பாதைகளையும் தோற்றுவிக்கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor