யாழில் அப்துல்கலாமின் சிலை திறந்து வைத்து முதலமைச்சர் உரை

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில் உள்ள இந்திய வளாத்தில் இச்சிலை நிறுவப்பபட்டுள்ளது.

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக யாழ் ஆலவலக கொன்சலாட் ஆ. நடராஜன் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி. கே. சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலார் எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதம செயளாலர் ஏ.பத்திநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ. வாகீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை…

குருர் ப்ரம்மா…….
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மாண்புமிகு ஜஸ்வர்தன் குமார் சிங்ஹ அவர்களே, இந்தியத் தூதரகத்தின் யாழ்ப்பாணத்திற்கான பிரதித்தூதுவர் கௌரவ யு.நடராஜன் அவர்களே, வடமாகாணசபைத் தலைவர் அவர்களே, எமது கல்வி அமைச்சர் அவர்களே, வடமாகாணத்தின் ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் கூரே அவர்களே மற்றும் இங்கு கலந்து கொண்டிருக்கும் கௌரவ மக்கட் பிரதிநிதிகளே, அதிதிகளே, சகோதர சகோதரிகளே, என் குழந்தைகளே!

மதியூகத்தையும் மனிதத்துவத்தையும் மதிக்கும் நன்நாள் இன்றாகும். எம் அனைவரதும் மனத்தில் குடி கொண்டிருக்கும் மாமேதை, அணுவாராய்ச்சி நிபுணர், ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி, பேராசிரியர், முன்னைநாள் இந்தியக் குடியரசுத் தலைவர், மனிதாபிமான மகானுபாவர், குழந்தைகள் தோழன் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை இப் பொதுநூலக வளாகத்தில் திரை நீக்கம் செய்யப்பட்டிருப்பது எம் அனைவருக்கும் பேருவகையை தருகின்றது. இந்தியத் துணைத்தூதுவர் திரு.நடராஜன் அவர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் பயனாகவே டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை இன்று இங்கே நிறுவப்பட்டுள்ளது. எமது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இந்நிகழ்வில் பங்கு பற்றுவது எமது நிகழ்ச்சிக்கு மெருகூட்டுகின்றது.

ஒரு தலைசிறந்த கல்விமானும் விஞ்ஞானியும் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிலையானது சிறந்த நூல்களின் மையமாக விளங்கும் யாழ் பொது நூலக வளாகத்தில் அமைக்கப் பெற்றிருப்பது எமது மாணவர்களிடையே அவர் பற்றிய சிந்தனைகளை மீட்டுப் பார்க்கவும் அவர் விட்டுச் சென்ற பாதையில் கல்வி கற்று ஒரு உயர் நிலையை அடையவுந் தூண்டக் கூடிய உந்து சக்தியாக அமைகின்றது.

எம்மிடையே வாழ்ந்துவரும் பலர் இறந்து போகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களை அவர்களின் குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும் நினைவு கூருகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் குடும்பத்தாரால் மட்டுமன்றி அவர்கள் பிறந்த ஊர், மற்றும் கிராமத்தில் உள்ள மக்களால் நினைவு கூரப்படுகின்றார்கள். அவர்கள் நினைவாக மண்டபங்களை அமைக்கின்றனர். பஸ் தரிப்பிடங்களை அமைக்கின்றனர். மற்றும் இன்னோரன்ன நினைவுச் சின்னங்களை அமைத்து அவர்களை நினைவு கூருகின்றார்கள்.

ஆனால் மிகச் சிலரே உலகளாவிய ரீதியில் நினைவு கூரப்படுகின்றார்கள்.

இப்புவியில் வாழ்ந்த காலப்பகுதியினுள் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறைமை, அவர்களால் சாதிக்கப்பட்ட சிறந்த சாதனைகள், விடா முயற்சிகள், அவர்கள் நடத்தையின் முன் உதாரணங்கள் போன்றவை அவர்களை உதாரண புருஸர்களாகக் கருத வைக்கின்றன. எனவேதான் அவர்களின் பின்னால் வருகின்றவர்கள் அவர்கள் காட்டிய பாதையை அடியொற்றி முன்னேறக்கூடிய வகையில் அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால் அவர்களையும் விஞ்சிய மிகச் சிலர் கற்பனையில் கூட நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவு அதீத திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்டவர்களாக விளங்கி, இவ் உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்து, உலகமே வியந்து அவர்களை உற்று நோக்குமாறு வாழ்ந்து மடிந்துள்ளார்கள். டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் அவர்களில் ஒருவர். ஒப்புவமை இல்லாதவர். அவரின் திறமைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். என்றாலும் அவர் எளிமையின் பிறப்பிடமாக வாழ்ந்து மறைந்தார். மன்னர்களாலும் மாமேதைகளாலும் மதிக்கப்பட்டாலும் மக்களுடனேயே அவர் வாழ எத்தனித்தார். சாதாரண மக்கள் போலவே வாழ்ந்தார்.

அன்னாரின் இளமைக் காலத்தை சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயாகில், டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சாதாரண ஒரு ஏழைப் படகோட்டித் தொழிலாளியின் மகனாகப்பிறந்தவர். குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக சிறு வயதிலேயே அவர் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருந்தார். இருந்த போதும் கல்வியின் மீது அவர் கொண்டிருந்த அதீத ஈடுபாடு பிற்காலத்தில் அவரை ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும் அணுவாராய்ச்சியாளராகவும் உருவாக வழிவகுத்தது. அவரின் ஏழ்மை நிலை காரணமாக தமது பட்டப்படிப்பினை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் தந்தையாரின் வேண்டுகோளுக்கிணங்க கல்வியை இடை நிறுத்திக் கொண்டு வீடு செல்ல திட்டமிட்டுத் தம்மிடம் இருந்த புத்தகங்களைப் பழைய புத்தகங்கள் விற்பனை நிலையம் ஒன்றிற்கு விற்பதற்காக எடுத்துச் சென்றாராம். புத்தகக் கடைக்காரர் இப் புத்தகங்களைக் கவனமாக ஆராய்ந்துவிட்டு இவர் என்ன காரணத்திற்காக இப் புத்தகங்களை விற்க வந்துள்ளார் என்பதை அறிய முற்பட்டார். அறிந்ததும் அப் புத்தகங்களுக்கான பெறுமதிக்குரிய தொகையை அவருக்கு வழங்கி அதோடு சேர்த்து அந்த புத்தகங்கள் அனைத்தையும் அவரிடமே மீளக் கையளித்து அவரின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு உதவி செய்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் பின் அவர் படித்துப் பட்டம் பெற்றபின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளிப் பொறியியலாளராகப் பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் தொழில் நுட்பவளர்ச்சியில் அவரின் ஈடுபாடு காரணமாக அவர் இந்திய ஏவுகணை நாயகன் என பிற்காலத்தில் அறியப்பட்டார்.

1998ம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்ட போக்ரான் – II அணு ஆயுத பரீட்சையில் முக்கிய பங்காற்றியவர் அவர். இந்தியாவை 2020ம் ஆண்டளவில் ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பல திட்டங்களை முன்மொழிந்தார். அவரது ஊக்குவிக்;கும் முறையிலான பேச்சுக்களாலும் எளிய நடைமுறையினாலும் இந்திய மாணவர்களிடையே ஏன் உலக மாணவர்களிடையே கூட மிகவும் பிரபல்யம் பெற்றார். 2011ம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு “நான் என்ன தரமுடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர் அவர்.

எளிய வாழ்க்கை முறையைத் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும் கடைப்பிடித்தவர் அவர். எக்காலத்திலும் பகட்டு அல்லது படாடோப வாழ்க்கையைக் கைக்கொள்ளாத ஒரு பெருமகனாக அறியப்பட்டவர். இவர் இந்தியக் குடியரசின் 11ஆவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் பதவிக்காலம் முடிவுற்ற அன்றைய தினமே செங்கோட்டையில் உள்ள ராஜ் பவனில் இருந்து ஒரே ஒரு உடுப்புப் பெட்டியுடன் தனியாக வெளியேறினார். ஜனாதிபதியாக இருந்;த காலத்தில் அவருக்கு வழங்கிய பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் எந்தப் பொருட்களையும் அவர் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானவை என அரச வதிவிடத்திலேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டாராம். அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலங்களில் தமது உற்றார், உறவினர், சகோதரர்கள் என எவருக்குமே விசேட கவனிப்புக்களையோ அல்லது சலுகைகளையோ வழங்க விடவில்லை. மாறாக அவர்களுஞ் சராசரி இந்தியக் குடிமக்களாகவே கருதப்பட்டார்கள். அவர் தன்னையும் அவ்வாறே கருதினார்.

இவரின் வாழ்க்கை முறைமை அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணமாக அமைகின்றது.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிந்தனைகள் எப்போதும் மனிதவள மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி என்பவற்றையே குறியாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் அறிவூட்டுவதிலும் அவர்களைச் சரியான பாதையில் வழிப்படுத்துவதிலும் தமது கூடிய நேரங்களைச் செலவழித்தார்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டில் இராமேஸ்வரம் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியராக இருந்த போதும் அவர் இந்திய மண்ணுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் தமிழை நன்கு பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பேசும் உலகத் தலைவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் எமது வடபகுதி மக்களுக்குஞ் சொந்தக்காரராக எமது தமிழ்ப் பேசும் மக்களின் தலைசிறந்த தலைவனாக, எம் மாணவர்களின் வழிகாட்டியாக எம்முள் இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்.

இவர் மாணவர்களை விழிக்கும் போது ‘அன்பான மாணவர்களே கனவு காணுங்கள்’ என விழித்தே தமது உரையைத் தொடங்குவார். அவரின் உரையில் கனவு என்பதற்கு மிகச் சிறப்பானதொரு விளக்கத்தை அளித்திருந்தார். அதாவது ‘உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு’. ஒவ்வொரு மாணவனும் மாணவியரும் தாம் என்னவாக வரவேண்டும் என்பதை முற்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நிலையை அடையும் வரை ஊன் உறக்கம் மறந்து தொடர்ந்து பாடுபட வேண்டும்; அப்போது அவர்களின் இலக்கைச் சுலபமாக அடைய முடியும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை எம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக அமைதல் வேண்டும். எந்த வசதிகளும் அற்ற நிலையில் மிக அடிப்படை நிலையில் இருந்து கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதும் அவரின் சிந்தனைகள் மிக உயர்வாக இருந்த காரணத்தினால் அவர் பிற்காலத்தில் மாமேதையாக எல்லோராலும் போற்றப்படக்கூடிய ஒரு தலை சிறந்த அறிஞராக நாட்டின் தலைவராக விஞ்ஞானியாக அவரைத் திகழ வழிவகுத்தது. அவரின் தொடர் முயற்சியும் அயரா உழைப்புமே அவரின் வெற்றிக்குக் காரணம் என்றால் மிகையாகாது.

ஒவ்வொரு மாணவனும் மாணவியுந் தனது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான ஓர் முடிவை அல்லது எதிர்பார்ப்பை முற்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அதன் அடிப்படையில் செயலாற்ற முற்படல் வேண்டும் என்பதே மாணவருக்கான அன்னாரின் முக்கிய கருத்தாக இருந்தது. அவரின் சிந்தனைகள் எப்போதும் உயர்வானவையாக இருந்தன. நீ நீயாகவே இருக்கப் பழகிக் கொள் என்றார். நீ எல்லோருமாக இருக்க எண்ணிவிடாதே. அது உனது வாழ்வின் இலட்சியத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும் என அவரின் உரையில் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

அவரை ஒரு முறை பேட்டி கண்ட செய்தியாளர்கள் “நீங்கள் ஒரு சிறந்த பௌதீகவியலாளர், அணு ஆராய்ச்சியாளர், விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆகிய பல தகைமைகளைக் கொண்டுள்ள போதும் ஒரு ஆசிரியராக அல்லது பேராசிரியராகவே இருக்க ஆசைப்படுகின்றீர்கள் அது ஏன்” என்று வினவிய போது அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம் – “ஆசிரியர்கள் சாதிக்கக் கூடியவை பல. சிறந்த ஆசிரியர்கள் சிறந்த சாதனையாளர்களாக மாறுவார்கள். ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்புடனான சேவை பல மேதைகளை உருவாக்குவதற்கு வழிசமைக்கின்றது” என்றார். தமது வாழ்வின் அனுபவங்களை அவர் விபரிக்கும் போது 5ம் வகுப்பில் தனக்குக் கற்பித்த கனகசுந்தரனார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரைப் பற்றி மிகவும் சிறப்பாக குறிப்பிடுகின்றார். இவ் ஆசிரியர் தமக்கு கணிதப் பாடத்தை மட்டும் அல்ல கணிதத்துடன் சேர்த்து வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்ததாகவும் அவரின் ஆரம்ப வழிகாட்டல் பிற்காலத்தில் தனது உயர்ச்சிக்கு வித்திட்டதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இத்துணை சிறப்புக்களையும் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இல்லற வாழ்க்கையானது தமது இலட்சியத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக அமையக்கூடும் என்ற காரணத்தினாலோ என்னவோ திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர் தமது வாழ் நாள் முழுவதையும் நாட்டிற்காகவும் தமது மக்களுக்காகவும் செலவிட்டிருந்தார்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 2012ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யாழ் பல்கலைக்கழகத்தில் ‘புயலைத் தாண்டிய தென்றல்’ என்ற தலைப்பின் கீழ் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரியதொரு உரையை ஆற்றியிருந்தார். யாழ் இந்துக் கல்லூரியிலும் மாணவர்களிடையே உரையாற்றியது மட்டுமன்றி அம் மாணவர்களையும் எதிர்காலம் பற்றியதொரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய சிறந்த உரையை வழங்கிச் சென்றிருந்தார்.

இத்துணை சிறப்புக்களும் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று இன்று திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதென்றால் அது எமது மக்களுக்கான ஒரு கௌரவம் என்றே நாம் கொள்ள வேண்டும். தமிழர்தம் பண்பாட்டின் எடுத்துக் காட்டாக வாழ்ந்த அவரின் ஞாபகம் என்றென்றும் நிலைக்க அவரின் இந்தச் சிலை உதவி புரிவதாக என வாழ்த்தி என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி என் சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

abthul-kalam-5

abthul-kalam-4

abthul-kalam-3

abthul-kalam-2

abthul-kalam-1

Recommended For You

About the Author: Editor