யாழ். நூலக எரிப்பு ; 35 வருட நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்றும் அனுஸ்டிக்கப்பட்டது.

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத மிகவும் கொடூரமான சம்பவமாக கருதப்படும் யாழ் பொது நூலகம் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் பொது நூலகம் முற்றாக எரிந்ததுடன் அதுவரை நூலகம் பாதுகாத்துவந்த அரிய ஓலைச்சுவடிகள் நூல்கள் உள்ளிட்ட பொக்கிசங்களும் எரிந்து சாம்பலாகின

அதன்பின்னர் 25 வருடங்கள் கழிந்த நிலையில் மீள் புனருதாரணம் செய்யப்பட்டு 2004ம் ஆண்டு முதல் பொது நூலகம் இயங்க ஆரம்பித்துள்ளது. எனினும் இன்னமும் அப்போதிருந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில் நூலகம் எரிக்கப்பட்டு 35 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் பொதுநூலக வாசகர் வட்டத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்விற்கு வாசகர் வட்ட தலைவர் தங்கமுகுந்தன் தலைமை தாங்கினார். இதில் நூலக பணியாளர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நூல் நிலையத்தை ஆரம்பித்த ஸ்தாபகர் அமரர் க.மு செல்லப்பா மற்றும் நூல் நிலையம் எரிவதாக கேள்வியுற்று உயிர்நீத்த அருட்தந்தை தாவீது அடிகளாரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

libe-3

libe-2

libe-1

Recommended For You

About the Author: Editor