கௌரவ சபாநாயகர் அவர்களே!….
19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
1978 இல் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான காலஞ்சென்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகமாக்கியிருந்தார்.
அது நடைமுறைக்கு வந்தபோது தென்னிலங்கையிலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை மாற்ற வேண்டும் என்ற விருப்பங்களும் எழுந்திருந்தன.
இதேவேளை, வடக்கு கிழக்கு, மற்றும் மலையகத்தைப் பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு ஆதரவாக தமிழ், முஸ்லிம் மலையகத் தலைவர்களிடம் இருந்து குரல்களும் எழுந்திருந்தன.
ஆனாலும், 1978 இல் இருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையே நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் தான் தேர்தலில் வென்றால் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைப்பேன் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். அதற்கு முன்னரும் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவதாக கூறியிருந்தாலும் அவர்களால் அவர்களது காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது அந்த உறுதி மொழியை நம்பிக்கையோடு ஏற்று ஒட்டு மொத்த இலங்கை தீவில் வாழும் சகல இன சமூக மக்களில் பெரும்பான்மையான மக்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர்.
மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று, அதற்கு மதிப்பளித்து தனது தேர்தல் வாக்குறுதியை இன்று நிறைவேற்ற விரும்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் எண்ணங்களை நாம் வரவேற்கின்றோம்.
அந்த வகையில் நாமும் மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை விருப்பமுடன் வரவேற்கின்றோம்.
ஆனாலும், எமக்கு தொடர்ச்சியாக அரசியல் அங்கீகாரத்தை வழங்கி வரும் தமிழ் பேசும் மக்களின் குரலாக,…
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய (ஈபிடிபி) நாம் முன்வைக்கும் திருத்தங்களையும், யோசனைகளையும் 19 வது திருத்தச்சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
நிறைவேற்று ஜனாதிபதிமுறை என்பது நீடிக்கப்பட வேண்டுமா?… அல்லது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறையினை உருவாக்க வேண்டுமா?…
இதில் நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எமது மக்களின் நலன் சார்ந்த தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.
எம்மைப் பொறுத்த வரையில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையினையே நாம் விரும்புகின்றோம்.
எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும் அதில் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மத சமூக மக்களினதும் சம உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், தமிழ் பேசும் மக்களின் சார்பாக நான் 19 வது திருத்தச்சட்டம் குறித்து சில முன் மொழிவுகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
சுயாதீனமான வகையில் செயற்படும் 11 ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட அரசியலமைப்புப் பேரவையில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும். அந்த வகையில் அரசியலமைப்புப் பேரவையில் குறைந்தது ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.
ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும் தலைவர்களையும் அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும்போது ‘பன்முகத்தன்மை’ பேணப்படுவதோடு ‘இனவிகிதாசாரமும்’ பேணப்படல் வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழு அல்லது தேர்தல் ஆணையாளர் தேர்தல் சட்ட விதிகளையும் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்படும் ஒழுங்குமுறைகளையும் மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக பாராளுமன்றம், தேர்தல் ஆணையாளரின் ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிரான தண்டங்கள் தொடர்பான சட்டதிட்டங்களை ஆக்க வேண்டும். அரசியலமைப்பின்கீழ் ஏற்படுத்தப்பட்ட மேல் நீதிமன்றங்கள் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகார வரம்பெல்லை உடையதாக அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
ஜனாதிபதி உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் போது குறைந்த பட்;சம் இரண்டு தமிழரும் இரண்டு முஸ்லிமும் அந்நீதிபதிகளின் குழாமில் இருப்பதனை உறுதிசெய்தல் வேண்டும்.
19வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆணைக்குழுக்களுக்கு மேலாக ‘இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான’ ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்படல் வேண்டும். இவ் ஆணைக்குழு இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இனமத நல்லிணக்கத்திற்குக் குந்தகமாகச் செயற்படுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் கொண்டதாக இருத்தல் வேண்டும். கயானா நாட்டின் அரசியல் அமைப்பில் இவ்வாறான ஏற்பாடு உள்ளது. விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தூண்டக்கூடிய வகையில் தேசியக் கொடியினை மாற்றியமைத்து அரசியல் யாப்புக்கு முரணான வகையில் பயன்படுத்தியமை கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயற்பாடுகள் தொடராமல் கட்டுப்படுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஆணைக்குழு அவசியம்.
இதே வேளை அரசியலமைப்பு சீர்திருத்த சட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான எந்த வித முன்மொழிவுகளும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் என்பது ஐக்கிய இலங்கையின் இறைமைக்கு எதிரானது அல்ல
எமது மக்களுக்காக நாம் விரும்பும் அரசியலுரிமை என்பது சிங்கள சகோதர மக்களின் உரிமைகளை ஒரு போதும் பறித்தெடுப்பதாக இருக்காது.
அரசியலமைப்பின் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதை மேலும் செழுமைப்படுத்தி அதிலிருந்து தொடங்கி அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எமது விருப்பமாகும்.
இதையே நாம் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையெனக் கருதி நீண்ட காலமாகவே அதை வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஆகவே 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை அடையாளம் காணப்பட்ட தடைகளை நீக்கி,
சமச்சீரற்ற அதிகாரப்பகிர்வுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகளையும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்வாங்க வேண்டும் என்பதனையே நாம் விரும்புகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை தமிழ் பேசும் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்பியிருந்தோம்.
ஆனாலும், இன்று எமது மக்களின் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமிழ் மக்களை நோக்கியும் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை நகர்த்தியிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக, இன்று அதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களே நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களாக நாம் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே 19 வது திருத்தச்சட்டம் குறித்து எந்த விதமான கருத்துக்ளையும் நாம் வலியுறுத்தியிருக்கவில்லை.
நூறு நாட்கள் வேலைத்திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே நாம் மீண்டும் 13 வது திருத்தச்சட்டத்தை தடையின்றி அமுலாக்குவது குறித்து வலியுறுத்த தொடங்கியிருக்கின்றோம். அதேவேளை 100 நாட்கள் வேலைத் திட்டத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்ற முனுமுனுப்பை சில அரசியல்வாதிகள் தற்போது ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் ஒன்று விரைவில் வர இருக்கின்ற படியினால் தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து இந்த முனுமுனுப்புகள் தொடங்கிவிட்டது.
ஆட்சி மாற்றம் நடந்து, புதிய அரசாங்கம் அறிவித்த, நூறு நாட்கள்
வேலைத்திட்டத்தை தமிழ் பேசும் மக்கள் உரிய முறையில் அனுபவிக்க முடியாமல் போனமைக்கு பொறுப்பற்ற சில தமிழ் அரசியல் வாதிகளே காரணம்
காலம் நம் கைகளில் அரியபலவாய்ப்புகளைத் தந்துவிட்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கைக்குஎட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போலவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்த நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் பயன்களைக்கூட எமது மக்கள் உரிய முறையில் அனுபவிக்க முடியாமலேயே போய்விட்டது.
தமிழ்த் தரப்பில் இருந்தும் அரசாங்கத்தின் உயர் பீடமான தேசிய நிறைவேற்றுச் சபையில் பங்கெடுத்து வருகிறார்கள். இதேபோல் அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரங்களிலும் பங்கெடுத்து வருகின்றார்கள்.
ஆனாலும் இவர்கள் அரசாங்கத்துடனான தமது உறவுகளைப் பயன்படுத்தி, நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை தமிழ்மக்களை நோக்கி எடுத்துவரத் தவறிவிட்டார்கள். நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை மட்டுமன்றி அதற்கு அப்பாலும் சென்று பெறவேண்டிய அரசியலுரிமைக்கான முயற்சிகளையும் தவறவிட்டு வருகிறார்கள்.
அரசியல் அதிகாரப் பலத்தைதம் வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் அதை எமது மக்களுக்காக சரிவரப் பயன்படுத்த விரும்பாத வரலாற்றுத் தவறுகளே இன்னமும் நீடித்துச்செல்கிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களினால் எமது மக்களே வரலாற்றில் தொடர்ந்தும் அரிய வாய்ப்புகளை இழந்து, துயரப்பட்டு நிற்கிறார்கள்.
அரசியல் பலத்தை வைத்து எமது மக்களுக்காகப் பேரம்பேச வேண்டியவர்கள,; அர்த்தமற்ற வீரம்பேசி காலம் கழித்து வருகிறார்கள். எமது மக்களின் வாழ்வுரிமைக்காகவும், அதிகாரப் பகிர்விற்காகவும் அரசுடன் பேரம்பேசி பெறவேண்டிய வாய்ப்பை பெற்றிருந்தாலும் இவர்கள், தமது கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிகளிலும், சுயலாப அரசியல் செயற்பாடுகளிலும் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.
நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டகாலம் தொட்டு, அரசியல் பலமுள்ளபோது நாம் ஆற்றிய பணிகளையாரும் மறந்துவிடப் போவதில்லை.
அதேபோல், அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்திருந்த காலத்திலும் எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு ஆற்றிய பணிகளையும் யாரும் மறுத்து விடமுடியாது. பொறுப்பற்ற தமிழ் அரசியல் வாதிகளிடம் அரசியல் பலம் இருந்தும் பயனில்லை என்பதற்கு நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை சரிவரப் பயன்படுத்தாமை இன்னொரு உதாரணமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் கடந்த சுதந்திர தின வைபவத்தில் நீண்ட உரையொன்றை ஆற்றியிருந்தார்.
அந்த உரையில்,.. யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டாலும், வடக்கிற்கும் தெற்கிற்குமான புரிந்துணர்வு உருவாக்கப்படவில்லை என்றும், அதை தனது ஆட்சிக்காலத்தில் உருவாக்குவேன் என்றும் மிக யதார்த்தமான முறையில் உறுதிமொழி வழங்கியிருந்தார். அதேபோன்று தமிழ் சிங்களப் புத்தாண்டுச் செய்தியிலும் 100 நாட்கள் வேலைத்திட்ட இறுதி நாளிலும் அதை மேலும் வலியுறுத்தியிருந்தார். கடைசியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை; குறைக்க முயற்சிகள் எடுக்கப்படும்போது சிறுபான்மை இனங்களைப் பாதுகாக்கின்ற வகையில் மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டதாக இரண்டாவது சபை ஒன்றை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் இன்று நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டுவரும் ஜனாதிபதி அவர்கள்,..
தனது சுதந்திர தின உரையில் வழங்கிய உறுதி மொழியை தமிழ் சிங்களப் புத்தாண்டுச் செய்தியிலும் 100 நாட்கள் வேலைத்திட்ட இறுதி நாளிலும் அதை மேலும் வலியுறுத்தியிருந்தார். அதை நடைமுறைப்படுத்துவார் என்றே நான் நம்புகின்றேன்.
அந்த வகையில், 19 வது திருத்தச்சட்டத்தில் நாம் வழங்கிய முன் மொழிவுகளையும் ஜனாதிபதி அவர்கள் இணைத்துக்கொள்வார் என்றே நான் நம்புகின்றேன்.
அதன் ஊடாக வடக்கிற்கும், தெற்கிற்குமான புரிந்துணர்வு மேலும் வலுவாக்கப்படும் என்றே நான் நம்புகின்றேன்.