18 வயது நிரம்பினாலும் வாக்குரிமை பெற தாமதமாகும் இலங்கை இளைஞர் யுவதிகள்

இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் திகதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வயதுக்கு வந்தும்கூட வாக்காளராகப் பதிவு செய்ய முடியாதிருப்பதாக முறையிடப்பட்டிருக்கின்றது.

ஜுன் மாதம் முதலாம் திகதி, 18 வயதை எட்டாத ஒருவர் அடுத்த வருடம் ஜுன் முதலாம் திகதி வரையில் 18 வயதை எட்டி, பல மாதங்கள் கடந்த நிலையில் வாக்காளராகப் பதிவு செய்வதற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கின்றது என்று அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

வாக்காளராகப் பதிவு செய்யும் தற்போதைய இந்த நடைமுறை காரணமாக நாடாளவிய ரீதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளும் உரிமையை இழப்பதாக கவலை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இளைஞர், யுவதிகளுக்காகச் செயற்பட்டு வருகின்ற அவ்ரியல் எனப்படும் நிறுவனத்தினரே மனித உரிமைகள் ஆணையகத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.

அதேவேளை, ஜுன் மாதம் முதலாம் திகதி, 18 வயதை எட்டியதும் வாக்காளராகப் பதிவு செய்தாலும்கூட, அந்தப் பதிவுகள் உடனடியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் அத்தகைய பதிவின் பின் உடனடியாக வருகின்ற தேர்தல்களில் இளைஞர்கள், யுவதிகள் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பதிவு செயற்பாட்டில் இத்தகைய குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, வாக்காளர் பதிவு நடவடிக்கையில் காணப்படுகின்ற இக்குறைபாட்டை நீக்குவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் ஊடாகவே இந்தக் குறைபாட்டை நீக்க முடியும் என்பதை அரசியல் தலைவர்களுக்கு விளக்கிக் கூறியிருப்பதாகவும், அவர்களே இதற்கு உரிய நடவடிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor