15 மீனவர்கள் கைது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று முன்தினமும்,நேற்றும் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

jeya - modi

அந்தக் கடிதத்தில், செப்டம்பர் 1ஆம் தேதியும் 2ஆம் தேதியும் ராமநாத புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனது கடிதத்தில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 15 கைது சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் இதில் 319 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, 62 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதை ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் முயற்சியால் 319 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டாலும், படகுகள் இன்னும் இலங்கை வசம் இருப்பதை குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், இது இலங்கை அரசின் மனிதத் தன்மையன்ற குரூரமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து

தவிர, பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என தான்தான் இலங்கை அரசுக்கு யோசனை தெரிவித்திருப்பதாக கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், அவரது இந்தக் கருத்து, மீனவர் சமுதாயத்திடம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களிடமும் கண்டன உணர்வை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்து பாரதீய ஜனதாக் கட்சி அல்லது இந்திய அரசின் அதிகார பூர்வ கருத்து இல்லை எனத் தான் நம்புவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, கச்சத்தீவையும் பாக் நீரிணையில் தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையையும் மீட்பதன் மூலம் மத்திய அரசு தீர்க்கும் என தான் நம்புவதாகவும் உடனடியாக பிரதமர் தலையிட்டு, 15 மீனவர்களையும் தற்போது இலங்கை வசம் இருக்கும் 63 படகுககளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.