குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்

கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் விசேட ரோந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதனடிப்படையில் அண்மையில் தொண்டமானாறுப் பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது. இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநராலும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரையை அண்டிய பகுதிகளில் உள்ள பிரதேச செயலர்கள் தமது பிரதேசமட்டத்தில் கட்டாயமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராக வேண்டும்.

மேலும், மாதத்தில் இரண்டு தடவைகள் கூட்டங்களை வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோர் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என கூறினார்.

Recommended For You

About the Author: Editor