வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேர் அடுத்த ஒரு மாதத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்!!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்சமயம் இறக்குமதி செய்யப்பட வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகி விட்டதால் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் இறக்குமதியை இடைநிறுத்த அரசு பணித்துள்ளதால் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேர் அடுத்த ஒரு மாதத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று அகில இலங்கை பதிவுசெய்யப்படாத இருசக்கர வாகன விற்பனையாளர் சங்கம் – வடமாகாணத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊடகங்கள் ஊடாக வலியுறுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

நாட்டில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகன இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் மோட்டார் சைக்கிள் முகவர்களின் காட்சியறைகளில் மோட்டார் சைக்கிள்கள் முடிவடையும் நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குள் மோட்டார் சைக்கிள் காட்சியறைகள் மூடப்படவுள்ளன.

இதனால் விற்பனை முகவர்கள் 90 பேர், 300 பணியாளர்கள் மற்றும் அவர்களைத் தங்கி வாழ்வோர் என ஆயிரத்து 500 பேர் வடமாகாணத்தில் நேரடியாகப் பாதிக்கப்படவுள்ளனர். அத்தோடு சேவிஸ் நிலையங்களைச் சேர்ந்தோர் அவர்களைச் சார்ந்தோர் உள்பட 3 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படவுள்ளனர்.

முகவர்கள் அனைவரும் வங்கிக் கடன்களை மீளச் செலுத்துவதில் பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதும் அவற்றின் இருப்பு முடிவடைந்துள்ளது.

எனவே மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதித் தடையை அரசு நீக்கவேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை எமக்கு வழங்கவேண்டும்.

அரசினால் அனுமதி வழங்கப்பட்டாலும் சாதாரண நிலைக்கு மீள்வதற்கு இரண்டு தொடக்கம் மூன்று மாதங்கள் ஏற்படும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor