நாளை பொதுத்தேர்தல்: எப்படி வாக்களிப்பது?

க்கள் கட்டாயம் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஒவ்வொரு மக்களும் பங்களித்திருக்க வேண்டும்.

சரியான நபர்களை இனம்கண்டு, பொதுமக்கள் வாக்களிக்காமல் இருப்பது, தவறானவர்களின் அரசியல் பிரவேசத்திற்கும் வழிவகுத்து விடும்.

வாக்களிக்க செல்லும் போது

நாளை வாக்களிக்க செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்த செல்லுங்கள். முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆளடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணத்தை எடுத்து செல்லுங்கள். சமூக இடைவெளியை பேணுங்கள். கறுப்பு, அல்லது நீல நிற பேனாவை எடுத்துச் செல்லுங்கள்.

எப்படி வாக்களிப்பது?

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில், தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர், எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விளக்கமளித்தார்.

“வாக்காளரான நீங்கள் எந்த கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை வீட்டிலேயே தீர்மானித்திருப்பீர்கள். இதன்படி வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை கையில் எடுத்ததும், நீங்கள் வாக்களிக்கும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு நேராகவுள்ள சிறிய பெட்டிக்குள் புள்ளடி ஒன்றை இடவேண்டும்.

அந்த இடத்தில் வேறு எதையும் எழுதவோ, வேறு அடையாளத்தை இடவோ வேண்டாம். வேறு அடையாளம் இட்டாலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகளை இட்டாலோ அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். அதனால் அந்த பெட்டிக்குள் ஒரு புள்ளடியை மாத்திரம் இடுவது போதுமானது.

அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கை வழங்க விரும்பினால் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள், மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களின் மேல் புள்ளடியிட முடியும்.

3 வேட்பாளர்களிற்கு மாத்திரமே ஒருவர் விருப்பு வாக்கிட முடியும்.

இதன்படி ஒரு வேட்பாளரின் இலக்கத்தின் மீதோ, இரண்டு வேட்பாளர்களின் இலக்கங்களின் மீதோ, மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களின் மீதோ புள்ளடியிட்டு விருப்பு வாக்கை செலுத்த வேண்டும்.

விருப்பு வாக்கை மாத்திரம் செலுத்தி விட்டு, கட்சி அல்லது சுயேட்சையின் சின்னத்திற்கு புள்ளடியிடாமல் விட்டால், அது செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.

கட்சி, சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு நேராக முதலில் புள்ளடியிட்டு, பின்னர் விரும்பினால் வேட்பாளர்களின் இலக்கங்களில் விருப்பு வாக்கை புள்ளடியிட்டு விட்டு, வாக்குச்சீட்டை மடித்து, அங்குள்ள வாக்குப்பெட்டிக்குள் இட வேண்டும்“ என்றார்.

Recommended For You

About the Author: Editor