காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த புதிய பேருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

ஆரம்ப நிகழ்வில்,வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.ஆ.எப்.அமீன், வடமாகாண பிராந்திய முகாமையாளர் செயலாற்றல் ஏ.ஜே.லம்பட், வடமாகாண பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை பாதுகாப்பு முகாமையாளர், பிராந்திய வினியோக முகாமையாளர், பிராந்திய தொழில்நூட்ப முகாமையாளர் மற்றும் கிளிநொச்சி சாலை முகாமையாளர், தொழில்சங்க உறுப்பினர்கள், சாரதி காப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகிய குறித்த சேவை இரவு 8.05மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின்னர் 20.15மணிக்கு புறப்பட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, அனுராதபுரம்,கல்கமுவ ஊடாக மகரகம வைத்தியசாலையைச் சென்றடைந்து அதே பாதை ஊடாக காலை 8.40மணிக்கு காலியைச் சென்றடையும்.

பின்னர் அதேநாள் பிற்பகல் 4.30மணிக்கு காலியில் இருந்து சேவையை ஆரம்பித்து காலை 6.40மணிக்கு யாழ். நகரை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor