அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான வேலைத்திட்டம்

கோவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களைச் சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றைத் தயாரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் மருந்துத் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் (2020.03.25) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏனைய தொற்றா நோய்களுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஊரடங்குச் சட்டம் காரணமாக மருந்துகளைக் கொள்வனவு செய்வதில் சிரமமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைக்குத் துரிதமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலின்படி இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின்
இருப்பு எதிர்வரும் மாதங்களுக்குப் போதுமான அளவு மருந்துக் களஞ்சியங்களில் காணப்படுவதாகத் தெரிய வந்தது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு மருந்துப் பொருள் உற்பத்தியின் பிரச்சினைகளைத் தீர்த்து, மருந்துப் பொருள் உற்பத்தியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும் இதன்போது கவனஞ் செலுத்தப்பட்டது.

தற்போது நாட்டில் காணப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களின் இருப்பு தொடர்பாகவும், இக்கலந்துரையாடலில் கவனஞ் செலுத்தப்பட்டதுடன், அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான இயலுமை காணப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக இதன்போது மருந்துப் பொருள் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பாக அரசின் தலையீடு அவசியம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்தின் சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடிய பசில் ராஜபக்ஷ அவர்கள் மருந்துப் பொருட்களின் இறக்குமதி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களில் கோளாறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலவசமாகவும், மிகவும் விரைவாகவும் அந்தக் கோளாறுகளை நிவர்த்தி செய்து மருத்துவ உபகரணங்களை இயல்பு நிலைக்கு மாற்றுவதற்கு மருத்துவ உபகரணப் பொறியியலாளர் சங்கத்தினர் தமது உதவியை வழங்க இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டத்தின் மத்தியில் ஏனைய நோய்களுக்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் கவனித்துப் பராமரிப்பது பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும் என இதன்போது பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க, சுகாதார மற்றும் தேசிய மருத்துவச் சேவைகள் மேலதிக செயலாளர் (மருத்துவ வழங்கல்) சுனில் த அல்விஸ் மற்றும் மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, இலங்கை மருந்துகள் வணிகசபை, இலங்கை மருத்துவ உபகரணங்கள் கைத்தொழில் சபை, அகில இலங்கை மருந்தக உரிமையாளர்களின் சங்கம், இலங்கை மருந்து வியாபாரிகளின் சங்கம் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வழங்கல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor