வடக்கின் பெரும் போர்: சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வலுவான நிலையில்!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 114ஆவது போட்டியாகும்.

விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் இன்று களம் இறங்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் முன்னணி வீரர்கள் மூவர் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இறுதியில் அந்த அணி முதலாவது இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக விஜஸ்காந்த் 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பில் கிருசன் 3 விக்கெட்டுக்களையும் விதுசன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் வினோதன் 20 ஓட்டங்களுடனும், டினோசன் 29 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். சிறப்பாக ஆடிய, சுகேதன் 49 ஓட்டங்களுடன் அரைச்சதம் பெறும் வாய்ப்பையிழந்து வெளியேறினார்.

இரண்டாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Recommended For You

About the Author: Editor