காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு

யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலைமாறுகால நீதி தொடர்பான நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்காக விதிக்கப்படும் வெளிப்புற காலக்கெடுக்கள் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யதார்த்த நிலைமையைக் கருத்திற்கொள்ளாமல் அவ்வாறான காலக்கெடுக்கள் விதிக்கப்படுவதே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலைமாறுகாலப் பொறிமுறை குறித்த கருத்துக்களை முன்வைக்கும்போது வரலாறு, கலாசார, மத உணர்வுகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் என இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பலநாடுகளால் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்ட அமைப்பிற்கு எதிராக இலங்கையின் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையானது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிரானது அல்ல எனவும் சேனுக்கா செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

சமீபகால வரலாற்றில் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து பயங்கரவாதக் குழு மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தற்போது சர்வதேச அளவில் ஏனைய குழுக்களும் முன்னெடுத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சமாதானம், நியாயம், நல்லிணக்கம் நிலவும் சமூகத்தை உருவாக்குவது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் இலங்கை இது தொடர்பான தனது முன்னுரிமைகளை தானே உருவாக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor