கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனம் வழங்கக்கூடாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் நேரில் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் கட்சி முடிவுகளை எடுப்பதா என கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல வருடங்களாக மக்களுடன் இருந்து சேவையாற்றிய ஒருவருக்கு ஆசனம் கொடுக்கக்கூடாது என அவர் எப்படிக் கேட்க முடியும் எனவும் சரவணபவனின் ஆதரவாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் யாழ். மாவட்ட கிளைக்குழுக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பாக இரு உறுப்பினர்கள் பேசியிருப்பதுடன், கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஈ.சரவணபவனுடன் கட்சி உறுப்பினர்கள் பலர் ஆதரவாகப் பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தாலும் வட்டுக்கோட்டைத் தொகுதிக்குரிய வேட்பாளர் யார் என்பதை வட்டுக்கோட்டைத் தொகுதிக் கிளையே தீா்மானிக்கும். அதனை சுமந்திரன் தனித்துத் தீர்மானிக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி முக்கியஸ்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்றிரவு இருபாலையில் உள்ள சரவணபவனின் விடுதி வீட்டில் ஒன்றுகூடிய ஆதரவாளர்கள் சுமந்திரன், கட்சித் தலைமை சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும். அல்லது கட்சிக் கட்டமைப்பில் உள்ளவர்கள் கூடி முடிவுகளை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து தான் சொல்கின்றவாறு கட்சித் தலைவர் செயற்பட வேண்டும் என்று சுமந்திரன் எதிர்பாா்ப்பாரானால் நாம் அதனை வெறுமனே கைகட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தீர்மானம் எடுத்து அதனை சரவணபவனுக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தோ்தலில் பத்து வருடங்கள் பதவி வகித்தவா்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படையில் சரவணபவனுக்கு ஆசனம் வழங்கப்படாவிட்டால் வட்டுக்கோட்டைத் தொகுதி வேறுவிதமாக வியூகம் அமைக்கும் என்றும் அது தமிழரசுக் கட்சியின் பல பொிய தலைவர்களின் வெற்றிக்கே பாதிப்பாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor