100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்!! திட்டத்தின் முழு விபரம்!!

குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இதற்கான பொருத்தமான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி 20 க்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் நோக்கம், மிகவும் வறிய நிலையில் உள்ள, சமுர்த்தி உதவி பெற தகுதியிருந்தும் சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதாகும்.

அத்தகைய குடும்பங்களில், தொழிலாளர் சக்தியில் பங்களிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்ட பின்னர், சம்பந்தப்பட்ட துறைகளில் ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இதற்காக கல்வியறிவற்ற அல்லது குறைந்த கல்வியறிவற்றவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல் கட்டமாக நாடு முழுவதும் 100,000 புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. அவர்களை நிர்வகிக்க, பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி கற்றவர்களிற்காக வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதியிலும் சுமார் 300-350 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பிரதேசத்திலுள்ள விஹாரதிபதி, பிற மத தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவகர்களின் மேற்பார்வையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வின் சரியான தன்மையை மேலும் உறுதிப்படுத்த பாதுகாப்பு படையினரில் திறமையான பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தகுதியான பயனாளிகள் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் கல்வியறிவு தேவைப்படாத வேலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். தச்சு, விவசாயம், மீன்வளம், வனவியல் மற்றும் பிற பகுதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் சேவை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.

Recommended For You

About the Author: Editor