அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை தூரப்படுத்த வேண்டாம் – தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் வலியுறுத்தல்

அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை தூரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் ஊடகங்களின் முக்கியஸ்தர்களுடன் நேற்று முன்தினம் (14) அலரி மாளிகையில் ,இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் அரசாங்கத்தோடு நெருக்கமாக செயற்படாமல் விட்டாலும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏழு தசாப்தங்களாக ஏமாற்றி வந்துள்ளார்கள். சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடுவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை. எவ்வாறாயினும் நாடொன்றுக்கு ஒரு தேசிய கீதம் மாத்திரமே காணப்படுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறன விடயங்கள் பயன்படுத்தப்படுவதை காண முடியும் என்றும் கடந்த நான்கு வருடங்களில் வடபகுதி தமிழ் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்கவோ, அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவோ ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தவறியிருப்பதாகவும் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசாங்கத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்கியிருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வு அவசியமாக இருந்தாலும் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு விடை காண்பது அவசியமாகும். இதனால் அரசாங்கம் இந்த விடயம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றும் கூறினார்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் குறிப்பிடுகையில் இது குறித்து
இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளேன் அதன் முதற்கட்டமாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவார் என்று தெரிவித்தார்.

இந்த மீனவர் பிரச்சினை காரணமாக வடக்கு பகுதியிலுள்ள தமிழர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் தான், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை தான் கோரியுள்ளதாகவும், அந்த விவரங்கள் கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும். இந்த கைதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளனர், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்வது கடினம் என்றும் குறிப்பிட்டார்.

தோட்ட மக்களுக்காக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. . வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடபகுதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடபகுதி மக்களுக்கு அழுத்தங்கள் இன்றி வாழக் கூடிய சூழல் உருவாகி இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு இந்தியாவிடமே காணப்படுகின்றது என்ற தலைப்பில் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த காலங்களில் இவ்வாறு தான் தமிழ் மக்கள் மத்தியில் கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் நாம் அதனை செய்வோம். அது எமது பொறுப்பாகும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்குக்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்து அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். யார் வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் முழு நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்தின் சேவை குறைவில்லாது தொடரும். வடக்கு, கிழக்கு மக்களை நாம் கைவிடமாட்டோம். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பிரதமருடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, டக்லஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், சி. பி ரத்னாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் சுகபோக வழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் என ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்துகமகே இதன்போது தெரிவித்தார். அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சாதாரண குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு தண்ணீரை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தொழிலையேனும் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor