மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை!

மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வளங்கப்படுவதாகவும் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இந்த உதவித்தொகையை பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மஹபொல உதவித்தொகை நிதியம் இப்போது வெறும் 10.5 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது என்றும் அதனை மேலும் அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, மஹபொல நிதிக்காக பிரத்தியேகமாக ஒரு புதிய லொட்டரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் இந்த நிதிக்கான பணத்தை திரட்டுவதற்காக விரைவில் மஹபொல கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சியை மீண்டும் நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் மாணவர் ஒருவர் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவை 10,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor