யாழ்.பல்கலை. பழைய மாணவர்களுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.

பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெறும் என்று ஒன்றிம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய பலரும் பல்கலைக்கழகத்தில் அளவற்ற பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்ற போதும் அவர்களால் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஏதுநிலை கடந்த இருபது ஆண்டுகளாக பழைய மாணவர் சங்கம் தொழிற்படாமல் இருந்த நிலையில் சாத்தியமாகவில்லை.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பல்வேறு வகைகளிலும் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் பங்களிப்பு செய்யமுடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய பலரும் சமூகத்தில் உயர் பதவியில் உள்ளீர்கள். உங்களுடைய அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்புக்கள் பல்கலைக்கழகத்திற்கும் எமது பட்டதாரிகளின் எதிர்காலத்திற்கும் தேவை என்பதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் உணர்ந்து கொண்டோம்.

அதன் காரணமாகவே இத்தகைய ஒரு ஒன்று கூடலினை நாம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஊடாக ஒருங்கமைத்துள்ளோம்.

எனவே எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்க ஒன்று கூடலில் பங்கு கொள்ளுமாறும் அதனூடாக தொடர்ந்தும் எமது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் நிற்க கிடைக்கப் பெற்றுள்ள சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்துமாறும் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றோம் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor