பட்டாதாரிகளான மாற்றுத்திறனாளிகள்! முன்னாள் போராளிகள் சாதனை!

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு வந்திருக்கின்றது.

முன்னாள் போராளிகளான பிரதீபன் , மற்றும் விக்னேஸ்வரன் (B.A.in. Sociology Jaffna university Degree holders)இந்த இருவரும் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் இன்று பட்டதாரிகளாகி உள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக்கு வயது தடை இல்லை என்பதைப்போல இவர்களுடைய கல்வித்திறமைகள் பலவிடயங்களை சமூகத்திற்கு எடுத்துக் கூறியுள்ளன.

அத்துடன் பிரதீபன், மற்றும் விக்னேஸ்வரன் இருவரும் அகவொளி கற்கைநிலையத்தில் இடம்பெற்ற அயர்லாந்து நாட்டின் ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியின் பட்டதாரிகளும்கூட (Diploma in Counselling – Ireland University).

அவர்கள் பார்வையிழந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் திறமையினை என்னவென்று சொல்லமுடியும். குறைத்து மதிப்பிடமுடியாது. குறிப்பாக இருவரும் கணணியில் தட்டச்சு செய்தால் ஒரு எழுத்துப்பிழைகள்கூட வராது.

உங்களால் எங்களால் அது சாத்தியமா? என்றால் அது கேள்விக்குறிதான்.

அதுமட்டுமல்ல இன்னும் பல கைத்தொழில்சார்ந்த நுட்பங்களையும், இயல்பாகவே இசையமைக்கும் ஆற்றல்களையும் தங்களிடத்தில் அவர்கள் இருவரும் கொண்டுள்ளமையானது நாம் ஒவ்வொருவரும் வியந்துபார்க்க வேண்டிய விடயம் .

மற்ற மாணவர்களைவிட முதன்மைப்புள்ளிகளையும் வகுப்பில் எடுத்துக்கொண்டவர்கள். அந்தளவிற்கு உறுதியான மனம் உடையவர்கள் பிரதீபன் மற்றும் விக்னேஸ்வரன்.

வாழ்க்கையில் பலசோதனைக்கண்டாலும், அவர்கள் சாதனைகளை தொடரவேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிக்கின்றவர்கள்.

எந்நேரமும் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே அவர்களின் அபிலாஷை. அவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் பல ஏற்றங்களைக்கண்டு கல்வியில், குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றமடையவேண்டும் என பலரும் இருவருக்கும் பாராட்டுதலகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை போரில் இரு கண்களையும், ஓர் கையும் இழந்து இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.A பட்டம் பெறும் முன்னாள் போராளிகளான அகமொழி மற்றும் சந்திரமதி ஆகிய இரு பெண் பட்டதாரிகளுக்கும் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

எந்த நிலை ஏற்பட்ட போதிலும் முயன்றால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் இவர்கள், எம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.

Recommended For You

About the Author: Editor