காரைநகரில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு – இளைஞர்கள் திரண்டு சிரமதானம்

காரைநகரில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ள நிலையில் பிரதேசத்தில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு சிரமதானப் பணியை நேற்று முன்னெடுத்தனர்.

காரைநகர் பிரதேசத்தில் அண்மைய நாள்களில் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியதாக 58 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். காரைநகரில் கடந்த ஆண்டுகளைவிட டெங்கு நோய்த் தாக்கம் இம்முறை அதிகரித்துக் காணப்பட்டது.

அண்மைய நாள்களில் மழையுடனான காலநிலை நீடிக்கும் நிலையில் டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதிகரித்துச் செல்கின்றது.

இந்த நிலையில் பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக காரைநகரில் இளைஞர்கள் திரண்டு பிரதான வீதிகள், கைவிடப்பட்ட காணிகள் உள்ளிட்ட இடங்களில் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

வீதிகளில் காணப்பட்ட பொலித்தீன்கள், நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து அழித்ததுடன், புல் மற்றும் பற்றைகளையும் வெட்டி சுத்தப்படுத்தினர். மழை பொழிந்த வண்ணம் இருந்த போதும் அவர்கள் இந்தப் பணியை இடைவிடாது செய்து முடித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களாக அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று சுகாதாரப் பகுதியினருக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் காரைநகர் இளைஞர்களின் செயற்பாடு முன்மாதிரியானது என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor