ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் -சிவாஜி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 16ஆம் திகதி இரவுக்கு முன்னரேனும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று (புதன்கிழமை) கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியாக மாத்திரம் செய்யக்கூடிய விடயங்கள் உள்ளன. அதனையே நாம் வலியுறுத்தியுள்ளோம். இலங்கையின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்கள் ஆகும். அந்த 20 வருடங்கள் கழிவாக 14 வருடங்களில் வெளியில் வரமுடியும்.

எனவே 15 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் 16ஆம் திகதி இரவுக்கு முன்னரேனும் ஜனாதிபதி மைத்திரி விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor