மின்துண்டிப்பிற்கு எதிராக வவுனியாவில் இரவிரவாக போராட்டம்!

வவுனியாவில் 50இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியதை தொடர்ந்து, பொறுமையிழந்த மக்கள் நேற்றிரவு வீதிக்கிறங்கினார்கள். வவுனியாவில் நான்கு இடங்களில் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

நேரம் செல்லச்செல்ல போராட்டம் தீவிரமடைந்து வவுனியப புகையிரத நிலையத்திற்கு அண்மையாக புகையிரதத்தையும் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருளில் மூழ்கியுள்ள வவுனியாவில் நேற்று பின்னிரவு முதல் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

நேற்று முன்தினம் (4) ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பதற்காக சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி நேற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு கடந்தும் மின்சாரம் வழங்கப்படவில்லை. அத்தியாவசிய தேவையான மின்சாரம் இல்லாத காரணத்தினால் நீர் மற்றும் ஏனைய வசதிகளின்றி மக்கள் அல்லல்ப்பட்டனர்.

இந்த நிலையிலே மின்சார சபையின் இந்த நடவடிக்கையை கண்டித்து வீதிக்கிறங்கிய இளைஞர்கள் ஏ9 வீதியில் நான்கு இடங்களில் வீதி மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இரவிரவாக போராட்டம் நீடித்தது.

மின்சார துண்டிப்பால் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பொருள்கள் நாசமாகியதோடு, வீடுகளில் மலசல கூடங்களுக்கு கூட நீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இந்தநிலையில் வீதி மறியல் போராட்டத்தை கேள்வியுற்ற ஏராளமான இளைஞர்கள் அந்த இடத்திற்கு விரைந்து ஆதரவு வழங்கினர். இதனால் சிறிது நேரத்திலேயே பெருமளவு இளைஞர்கள் போராட்ட இடங்களில் குவிந்து விட்டனர்.

வீதி மறியல் போராட்டம் இடம் பெறுகின்ற இடத்திலே பொலிஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு கடந்தும் ஏ9 வீதி முடக்கப்பட்டு, வாகனங்கள் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேரமாக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து நள்ளிரவு புகையிரதத்தை வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகில் முற்றுகையிட்டனர்.

நள்ளிரவு 1 மணியளவில் மின்சார விநியோகம் சீராக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor