எப்படி கொல்லப்பட்டார் பக்தாதி?:அமெரிக்க ஒப்ரேசன் தகவல்கள்!

உலகின் ஆபத்தான மனிதராக கருதப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி நேற்று (27) விடியற்காலை அமெரிக்காவின் சிறப்பு படையின் நடவடிக்கையில் கொல்லப்பட்டிருந்தார்.
பக்தாதி கொல்லப்பட்டது, ஐ.எஸ் அமைப்பை மனதளவிலும், செயற்பாட்டளவிலும் நிச்சயம் முடக்கும். நீண்டநாள் அடிப்படையில் அந்த அமைப்பு இல்லாமல் போகும் வாய்ப்பையும் பக்தாதியின் மரணம் ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த பக்தாதி?

ISIS, அல்கயிதாவின் நீட்சியாக தோன்றிய ஒரு தீவிரவாத ஆயுதக் குழுவாகும். கடும் போக்குடைய போராளி ‘அபூ முஸ்அப் அல்-ஸர்காவி’ 2006ம் ஆண்டு ஜுன் 8ம் திகதி அமரிக்காவின் விமானத் தாக்தலுக்கு பலியாகியதன் பின்னர் அபூ உமர் அல்-பக்தாதி, அபூ ஹம்ஸா அல்-முஹாஜிர் என்போர் ஈராக்கின் அல்கயிதா அமைப்புக்கு தலைமை ஏற்றனர். இவர்களின் பின்னரே அபூபக்கர் அல் பக்தாதி அல்கயிதாவின் தலைமை பதவிக்கு வந்தார்.

பக்தாதி பதவிக்கு வந்ததன் பின்னர் ‘ஈராக் இஸ்லாமிய தேசம்’ என்ற பெயரில் தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தார். ஆனால் பக்தாதியின் இராணுவ நடவடிக்கைகள் மெல்ல மெல்ல அல்கயிதா அமைப்பை விடவும் கடும் தீவிரப் போக்கு கொண்டதாக மாறி வந்தது. அரபு வசந்தத்தின் தொடராக 2011ல் சிரியாவிலும் மக்கள் எழுச்சிப் போராட்டம் வெடித்தது. அப்போது ஈராக்கில் போராடிய அபூ முஹம்மத் அல்-கோலானி 2012ம் ஆண்டு சிரியாவுக்கு சென்று ‘ஜப்ஹதுன் நுஸ்ரா’ என்ற பெயரில் அல்கயிதாவின் கிளை அமைப்பொன்றை நிறுவினார். ஈராக்கில் பக்தாதியின் தலைமையில் அரச படைக் கெதிராக போராடிய அல்கயிதா அமைப்பின் கிளையாகவே சிரியாவில் ‘ஜப்ஹதுன் நுஸ்ரா’ அணி கேலானின் தலைமையில் போராடி வந்தது. 2013ம் ஆண்டு அபூபக்கர் அல் பக்தாதி ஈராக்கில் உள்ள இஸ்லாமிய தேசமும் சிரியாவின் ‘ஜப்ஹதுன் நுஸ்ரா’ என்ற பெயரில் போராடும் கிளை அமைப்பும் ஒரே இயக்கம் என்பதால் இரண்டையும் இணைத்து ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய தேசம் (ISIS – The Islamic state of Iraq and Sriya) என புதுப் பெயரிட்டு உலகிக்கு பிரகடனம் செய்தார். ISIS ஆயுதக் குழு அறபு மொழியில் சுருக்கமாக தாஇஷ் என அழைக்கப்படுகிறது.

கிலாபத் பிரகடனம்

2014ம் ஆண்டு ஜுன் 29ம் திகதி ஈராக்கின் தியலா முதல் சிரியாவின் எலப்போ வரையும் இஸ்லாமிய கிலாபத்தை பிரகடனம் செய்துள்ளதாக ISIS இயக்கம் தெரிவித்தது. கலீபா வாக அதன் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள், அமீரகங்கள், மன்னராட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தினதும் சட்டத் தன்மை கிலாபத் பிரகடனம் மூலம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து பகுதி களிலும் கலீபாவின் அதிகாரமே இதன் பின்னர் செயல்படும் எனவும் இயக்கத்தின் பேச்சாளர் அபூ முஹம்மத் அத்னானி அன்று பிரகடனம் செய்தார்.

ஈராக்கை சேர்ந்த பக்தாதி, ஈராக்கிய பல்கலைகழகத்தில் மத கல்வியை கற்ற காலத்திலேயே, தீவிர மதவாதியாக விளங்கினார்.

ஈராக்கில், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வீழ்த்தப்பட்டபோதும், பக்தாதி அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் கைகளில் சிக்கவில்லை. இதனால், இன்றைய உலகில் அமெரிக்காவிற்கு மிகமிக “தேவைப்படும்“ நபராக பக்தாதி விளங்கினார்.ஆனாலும் அபூபக்கர் அல் பக்தாதி மட்டும் சிக்கவில்லை.இவர்தான் ஐஎஸ் அமைப்பை உலகம் முழுக்க கட்டுப்படுத்தி வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பக்தாதி ஒரு மிரட்டல் வீடியோ வெளியிட்டார். அதுதான் அவரின் கடைசி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பக்தாதி எங்கே சென்றார், எங்கு திட்டங்கள் போடுகிறார் என்று தகவலும் வெளியாகவில்லை.

2017 மற்றும் 2018ல் அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் பக்தாதி காயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. இவர் கொல்லப்பட்டதாக பலமுறை தகவல் வெளியானது. 2018 ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட தொடங்கியதால், அபு பக்கர் அல் பக்தாதி உயிரோடுதான் இருக்கிறார் என்பது உறுதியானது. இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும், பக்தாதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

எப்படி கொல்லப்பட்டார்?

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் தொலைதூர கிராமமான பாரிஷாவில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு வானத்தில் திடீரென ஹெலிகொப்டர் சத்தங்கள் கேட்டன. சிரியாவில் இது வழக்கமான சத்தம்தான். ஏதாவதொரு தாக்குதலிற்கோ, இராணுவ பயன்பாட்டிற்கோ ஹெலிகள் செல்வதாக குடியிருப்பாளர்கள் நினைத்திருந்தனர். சில நிமிடங்களில் சரமாரியான வெடியோசைகள் கேட்க ஆரம்பித்தது. வானத்திலிருந்து துப்பாக்கி சன்னங்கள் காற்றைக்கிழித்துக் கொண்டு வந்தன.

பாரிஷாவின் ஒதுக்குப்புறமாக இருந்த பிரமாண்ட வீடு ஒன்றே குறி!அந்த வீட்டில்தான் பக்தாதி குடியிருந்தார்.எனினும், இது வழக்கமான ஒரு விடயமல்லவென அந்த பகுதி மக்கள் விரைவிலேயே தெரிந்து கொண்டு விட்டனர். காரணம், தரையிலிருந்தும் கடுமையான பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பு மோதல்! நள்ளிரவிற்கு பின்னர் திடீரென இந்த தாக்குதல் நடந்ததை, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் தாக்கப்படுவோம் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த எதிர்பார்ப்பின்மையும், திகைப்பும்தாக் அமெரிக்கப்படைகளிற்கு சாதகமாக அமைந்திருந்தது. அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் கொமாண்டோக்கள் மற்றும் ரேஞ்சர்ஸ் அணியை சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். வானத்திலிருந்து காப்புச்சூடுகள் வழங்கப்பட்டு கொண்டிருந்த போதே, ரோபோக்கள், தற்கொலை தாக்குதலை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் என 70 பேரைக் கொண்ட அணி, பக்தாதியின் வீட்டிற்கு வெளிப்புறமாக தரையிறங்கியது. பக்தாதியை உயிரோடு பிடிப்பது அல்லது கொல்வதுதான் அவர்களிற்கு இடப்பட்ட கட்டளை. அதை அவர்கள் செய்து முடித்துள்ளனர்.

பக்தாதி சிக்கியது எப்படி?

பல வருடங்களாக அமெரிக்காவிற்கு டிமிக்கி விட்டுக் கொண்டிருந்த பக்தாதி எப்படி குறிவைக்கப்பட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் ஈராக்கில் நடந்த எதிர்பாராத சில கைதுகள்தான் பக்தாதியின் இருப்பிடத்தை அம்பலப்படுத்தியது.

பக்தாதிக்கு பல மனைவியர்கள் உள்ளனர். அதில் ஒரு மனைவி, பக்தாதியின் மருமகன் ஒருவர், அவரது மனைவி, மற்றும் பக்தாதியின் மிகமிக விசுவாசமாக தகவல் பரிமாறுபவர் கடந்த மாதம் எதிர்பாராத விதமாக ஈராக்- குர்திஷ்களிடம் சிக்கினர். பக்தாதியின் மிகமிக விசுவாசமாக தகவல் பரிமாறுபவர் கைது செய்யப்படும் வரை பக்தாதியின் தொடர்பில் இருந்தார். எனினும், பக்தாதியின் மறைவிடம் அவருக்கு தெரியாது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஈராக்கின் மேற்குப்பகுதி பாலைவனத்தில் இருந்த ஐ.எஸ் அமைப்பின் மிகமிக இரகசியமான முகாம் ஒன்று பற்றிய தகவல் கிடைத்தது. அது ஐ.எஸ் அமைப்பின் மிகமிக இரகசியமான முகாம்.

அந்த முகாமை முற்றுகையிட்டபோது, பக்தாதி வடமேற்கு சிரியாவில் அல் கைதா அமைப்பினால் பராமரிக்கப்படும் வீடொன்றில் மறைந்திருக்கிறார் என்ற தகவலை பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர், செய்மதி மற்றும் புலனாய்வுத் தகவல்களின் மூலம் இருப்பிடத்தை அடையாளம் கண்டனர். தாக்குதலிற்காக Black Hawks ஹெலிகொப்டர்களில் அமெரிக்கப்படைகள் புறப்பட்டன. ரஸ்யா, சிரியா, துருக்கி படைகளின் கட்டுப்பாட்டு பகுதியை கடந்துதான் ஹெலிகள் அந்த இடத்தை செல்ல வேண்டியிருந்தது. தவறுதலாக புரிந்து ஏதாவது அனர்த்தங்கள் நடந்துவிடலாமென்பதால் மூன்று நாடுகளிற்கும், “விரும்பக்கூடிய பெரிய சம்பவமொன்று நடக்கப் போகிறது“ என்று மாத்திரம் தகவல் வழங்கியது அமெரிக்கா.

வீட்டை சுற்றிவளைத்த அமெரிக்கப்படைகள், பக்தாதியின் வீட்டு வாசலில் காவலரை சுட்டுக் கொன்றனர். எனினும், உள்ளிருந்து துப்பாக்கி சூடுகள் வந்தன. இதையடுத்து, பங்களாவின் சுவரில் ஆங்காங்கே துளைகளை ஏற்படுத்தி அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த பங்களாவில் பக்தாதியின் இரண்டு மனைவியர் இருந்தனர். அவர்கள் தற்கொலை அங்கி அணிந்திருந்தபோதும், அதை வெடிக்க வைக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
வீட்டுக்குள் அமெரிக்கப்படைகள் நுழைந்தபோது, அங்கிருந்த சிலர் சரணடைந்துள்ளனர். இருட்டுக்குள் ஒவ்வொரு அறையாக தேடுதல் நடத்தியபோது, அரபு மொழியில் அங்கிருந்த ஒருவர், பக்தாதியை விட்டு விடும்படி கேட்டுள்ளார்.

வீட்டின் தரைத்தளத்தை அமெரிக்க படைகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், தனது மூன்று பிள்ளைகளுடன் பக்தாதி சுரங்கப்பகுதிக்கு தப்பியோடினார். அவரை டெல்ட்டாப்படைகளும், நாய்களும் துரத்தி சென்றன. ஒரு கட்டத்தில் சுரங்கம் முடிவடைந்தபோது, அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரை மெதுமெதுவாக அமெரிக்கப்படைகள் நெருங்கிய நிலையில், தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தார்.

சனிக்கிழமை மாலை கோல்ப் விளையாடி விட்டு, அமெரிக்காவின் விசேட நடவடிக்கையை நேரடியாக வீடியோவாக பார்த்துக் கொண்டிருந்தார் ஜனாதிபதி ட்ரம்ப்.

மொத்தம் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்தது இந்த ஒப்ரேசன். 15 நிமிட முடிவில், ‘100 per cent confidence Jackpot. Over.’ என்ற தகவல் அமெரிக்க கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.

ஒசாமா பின்லேடன் நடவடிக்கையின் போது, ஒசாமாவிற்கும் ஜக்பொட் என்ற குறியீட்டு பெயரையே அமெரிக்கா வழங்கியிருந்தது. தற்போது பக்தாதிக்கும் அந்த குறியீட்டு பெயரே வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor