உள்ளக விசாரணை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஸ்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப் படுகொலைகள் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

suresh

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வடமாகாண சபை உறுப்பினர் சி.சிவமோகனின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழர்கள் காலங்காலமாக சிங்கள அரசுகளால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். தற்போது கூட புதிய அரசு ஐ.நா விசாரணையை ஒத்திவைக்கும்படி கூறியுள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக இரண்டாண்டுகளாக ஒரு ஆணைக்குழு விசாரணை செய்கின்றது. இரண்டு ஆண்டுகளில் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

இந்த விசாரணை இன்னும் ஆறு மாதங்கள் வரை நடைபெறவுள்ளது. இந்த விசாரணைகள் தொடர்பாக ஒரு இடைக்கால அறிக்கையை கொடுங்கள் என நாங்கள் கேட்கின்றோம். என்ன விசாரணை செய்தீர்கள்? விசாரணைகளின் முன்னேற்றம் என்ன? எத்தனை பேரை கண்டுபிடித்திருக்கின்றீர்கள்? யார் யார் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்குரிய தண்டனைகள் ஏதாவது தீர்மானிக்கப்பட்டதா? போன்ற விடயங்கள் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இதனை மூடுமந்திரமாக வைத்திருக்க முடியாது. இடைக்கால அறிக்கையொன்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்படி கோரியிருக்கின்றோம். மூடுமந்திரமாக நீதியை, நேர்மையை புறக்கணித்தவர்களாக தான் இந்த புதிய அரசாங்கமும் செயற்படும்.

தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் தமிழர்களை ஏமாற்றி வந்திருக்கின்றது. தந்தை செல்வா காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்திருக்க முடிந்தது. ஆனால் தீர்வு காணமுடியவில்லை. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பல இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றது.

இன்று கூட தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசாங்கம் தயாராகவில்லை. உள்ளக விசாரணைகளை நடாத்துவோம் என புதிய பிரதமர் மற்றும் புதிய வெளி விவகார அமைச்சர் கூறுகின்றனர். சர்வதேச விசாரணையொன்று நடைபெற்று முடிந்து ஐ.நா அறிக்கையை கையில் வைத்துள்ளது.

அந்த அறிக்கை வருகின்ற மாதம் வெளியிடப்பட வேண்டும். அவ்வறிக்கையை வெளியிட வேண்டாம், பொறுத்துக்கொள்ளுங்கள், வருகின்ற செப்ரெம்பர் மாதம் வரை கால அவகாசம் தாருங்கள் என புதிய அரசாங்கம் கோருகின்றது.

அறிக்கையை ஏன் வைத்திருக்க வேண்டும். ஓராண்டுகளாக விசாரணை செய்து ஒரு அறிக்கை தயாராக இருக்கின்றது. இலங்கை அரசாங்கம் அதனை வெளியிடும்படி ஏன் கோரக்கூடாது. அவர்களின் பொய்யான முகங்கள் வெளிவரும். உண்மையான பிரச்சினைகள் வெளிவரும். கொலைகாரர்கள் யார் என்று வெளிவரும். குற்றவாளிகள் யார் என்று வெளிவரும். அதனை இந்த அரசினால் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து தப்பிக்கொள்ளவே இவ்வாறு கோருகின்றது. தற்போதுள்ள அரசாங்கத்துக்கு ஆபத்துள்ளது. வரும் தேர்தலில் இவ்வாறானதொரு அறிக்கை வெளிவந்தால் தற்போதுள்ள புதிய அரசாங்கம் தோற்கடிக்கப்படலாம் என்ற பயமுள்ளது. இதன் காரணமாக தான் அறிக்கை தாமதப்படுத்தப்படுகின்றது என்றார்.

Related Posts