வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்திற்கு திரும்பும் போது அவர்களுக்கான பயண அனுமதியில் நடைமுறைப்படுத்தப்படும் தடைதொடர்பில் அரசுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

KN-daklas

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்றய தினம் (11) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும் போது அரசின் புதிய நடைமுறைகளால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எனது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்தவகையில் இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி விரைவில் அதற்கான தீர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியும். இருந்த போதிலும் நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் அரசுக்கு இருக்கும் நிலையில்தான் இவ்வாறான பயண அனுமதி தொடர்பிலான பிரச்சினைகளும் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் வெளிநாட்டவர்களுக்கு இத்தடை சாத்தியமானதாக இருந்தாலும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இவ்விடயத்தில் அரசு விசேட கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அதேவேளை இவ்விடயம் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.