வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வர ஆலயத்தின் தலைவர், நிர்வாகி மற்றும் பூசகர் ஆகியோர் தொல்லியல் சின்னங்களுக்கு சிதைவை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கபட்ட நிலையில் இன்று முன்னைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆலயத்துக்குச் செல்லும் ஏணியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்துக்கு சந்தேக நபர்கள் சார்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை நீதிமன்றம் நிராகரித்து கட்டளை வழங்கியது.

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.

அத்துடன், ஆலய நிர்வாகம், பூசகருக்கு எதிராக தொல்லியல் சின்னங்களுக்கு சிதைவை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றில் கடந்த ஒக்ரோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது, ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்ச்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

சமாதானதுக்கு குந்தகம் விளைவித்தனர் என்று சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அதனை நிராகரித்த நீதிவான், தலா 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் ஆலய நிர்வாகத்தினரை விடுவித்ததுடன், கடந்த நவம்பர் 6ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 6ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், கோரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படாமல் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கினை மன்றில் அழைக்குமாறு தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் நீதிமன்றில் கடந்த டிசம்பர் 11ஆம் திகதிக்கு நகர்த்தல் பத்திரம் அணைக்கப்பட்டது.

எதிரிகளுக்கு தகவல் வழங்கப்படவில்லை. வழக்கு அழைக்கப்பட்டது. எனினும் எதிரிகள் முன்னிலையாகததால் அவர்களைக் கைது செய்ய மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, ஆலய நிர்வாகி தமிழ்செல்வன், தலைவர் சசிகுமார் மற்றும் பூசகர் மதிமுகராசா ஆகியோர் மன்றில் முன்னிலையாகி போது, அவர்கள் பிணை நிபந்தனையை மீறியதாக இன்றுவரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று ஆலய நிர்வாகிகள், பூசகர் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்பட 16 சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகினர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் குற்றப்பத்திரத்தை நீதிவான், வழங்க முன்னர் ஆட்சேபனை தெரிவித்து சமர்ப்பணம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.

அவருக்கு சமர்ப்பணத்தை முன்வைக்க மன்று அனுமதியளித்தது.

“பொலிஸாரால் காரணமின்றி தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரத்தை நீதிவான் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆலயத்துக்குச் செல்வதற்கு பலகையால் அமைக்கப்பட்ட ஏணியை அகற்றி இரும்பிலான ஏணியை அமைத்ததாக பொலிஸார் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். அதற்கு உரிய அனுமதிகள் பிரதமர் மட்டத்தில் பெறப்பட்டுள்ளன. பொது நிதி பெறப்பட்டுள்ளது.

அதற்கான ஆவணங்களை மன்றில் சமர்ப்பிக்கின்றேன். அத்துடன் சந்தேக நபர்கள் ஆலய நிர்வாகிகள் என்பதால் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர். பொலிஸார் உரிய புலன்விசாரணைகளை முன்னெடுத்து அந்த ஏணியை மாற்றியவர்களை அடையாளப்படுத்தவில்லை.

எனவே அடிப்படையற்ற குற்றப்பத்திரத்தை மன்று நிராகரிக்கவேண்டும்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.

சந்தேக நபர்கள் சார்பிலான சமர்ப்பணத்தை ஏற்று பொலிஸாரின் குற்றப்பத்திரத்தை நிராகரித்து வவுனியா நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

பொலிஸார் உரிய புலன் விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்திய மன்று சந்தேக நபர்களை முன்னைய பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கு விசாரணை மே 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor