‘விமர்சனங்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’ : விஜய்

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக நடிகர் விஜய் பேசியுள்ளார்.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே என்ற இரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மெர்சல்’ படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் நிறைவாக மேடை ஏறிய நடிகர் விஜய் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார். 100 வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25 வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ரகுமான்-க்கு வாழ்த்துக்கள் சொல்லி பேச தொடங்கினார்.

அப்போது அவர், “வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா” என்று பேசினார்.

Recommended For You

About the Author: Editor