கடத்தியதாக நாடகமாடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விருந்துனர் விடுதியில் இரு நாட்கள் தங்கியிருந்த வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 35 வயதுடைய இரு பெண்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, வியாழக்கிழமை (25) உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர்.
கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய மேற்படி யுவதியிடம் தந்தை நான்கரை பவுண் தங்கநகையை வழங்கியிருந்தார். திடீரென வழங்கிய தங்க நகையை தந்தை கேட்கவே, அதை பக்கத்து வீட்டு பெண்ணிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், அதனை வாங்கி வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார்.
வாங்க சென்ற யுவதியும் பக்கத்துவீட்டு பெண்ணும் பயம் காரணமாக வீட்டை விட்டு சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கி நின்று தம்மை யாரோ கடத்தியதாக நாடகமாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் வீட்டாரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தனர்.
தீவிர விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார், இருவரையும் மறுநாள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்திருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் தந்தையின் பயம் காரணமாக இருவரும் சென்று விருந்தினர் விடுதியில் தங்கியதாக கூறியுள்ளனர். வியாழக்கிழமை (25) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, வழக்கினை விசாரித்த நீதிபதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.