விக்டோரியாக் கல்லூரியில் அதிபரின் உறுதி மொழியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

victoria-colegeசுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் மாணவர்களை இணைந்து கொள்வதற்கு கல்லூரி அதிபர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் கல்வி கற்பதற்கு அனுமதி கோரியிருந்த போதும், மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என காரணம் காட்டி கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதியினை வழங்க மறுத்திருந்தது.

இதனை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்றய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும் இணைத்து மேற்படி கல்லூரி அதிபருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து அதிபர் மாணவர்களை கல்லூரியில் இணைப்பதற்கு உடன்பட்டுள்ளார்.

இதன்படி, மேற்படி கல்லூரியில் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் என்ற கட்டுப்பாட்டினைத் தளர்த்தி ஒரு வகுப்பில் 35 மாணவர்களை இணைப்பதன் மூலம் தரம் 6 இல் உள்ள ஐந்து பிரிவுகளிலும் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு அதிபர் உடன்பட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை பதிவுகளை மேற்கொள்வதுடன், தொடர்ந்து புதன்கிழமை மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடலொன்று நடத்தி, வெள்ளிக்கிழமை மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்குவதாக கல்லூரி அதிபர் பெற்றோர்களுக்கு உறுதியளித்ததினால் மேற்படி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.