வாக்காளர் அட்டையின்றியும் வாக்களிக்க முடியும் ; தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது.

ஆகவே வாக்காளர் அட்டை உள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டை இல்லாவிடின் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது.

அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் தமது வதிவிட கிராம சேவகரை நாடி தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் நாளைய தினத்துக்குள் தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துள்ள முகவரிக்குரிய பிரதேச தபால் நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் நிகழ்நிலை முறைமை ஊடாக வாக்காளர் அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்ளும் வசதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய https://eservices.elections.gov.lk என்ற தேர்தல் இ-சேவை இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அதிலுள்ள குடிமக்களுக்கு என்ற பகுதியில் இருக்கும் தேருநர் பதிவு விபரம் தேடல் என்ற இ- சேவையினுள் பிரவேசிக்க வேண்டும்.

தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உள்ளிட்டு தகவல்களை ஆராய வேண்டும். அதன் துணையுடன் கிடைக்கின்ற தகவல்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான தேருநர் பதிவு விபரம் – பாராளுமன்றத் தேர்தல் 2024 என்பதனுள் பிரவேசித்தல் வேண்டும்.

2024 பாராளுமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் இடாப்பில் தமது தேருநர் இடாப்பு பதிவு தகவல்களை பார்வையிட முடியும்.

அதன் பிறகு தமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு வாக்காளர் அட்டை அச்சிடு என்பதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்க முடியும்.

அத்துடன் தமது கையடக்கத் தொலைப்பேசிக்கு குறியீடு (OPT ) ஒன்று கிடைக்கப்பெறும் ” Enter the code ” என்று தோன்றும் இடத்தில் அக்குறியீட்டை உள்ளிட்டு தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமானதல்ல, 2024 தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான அடையாள அட்டையொன்றை வைத்துள்ள வாக்காளர் எவரும் தமக்கு குறித்தொதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது.

ஆகவே வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்வது வாக்காளர்களுக்கும்; வாக்களிப்பு மத்திய நிலைய உத்தியோகஸ்த்தர்களுக்கும் இலகுவானதாக இருக்கும்.

Related Posts