வல்லை முடக்கில் உயிர் அச்சுறுத்தல் விடும் மதுசாலை – மக்கள் விசனம்

பருத்திதுறையிலிருந்து நெல்லியடியூடாக யாழ்ப்பாணம் போகும் AB20 பிரதான வீதியில், இமயானனுக்கு அருகில், வல்லைவெளியை அணுகும் முடக்கில், மிகமிக அண்மையில், விடுதியுடன் கூடிய மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்கு அண்மைக்காலத்தில் பல மோட்டார் விபத்துக்களையும் உயிர் பலிகளையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சுழலில் மதுபானக்கடை திறந்த வைத்திருப்பது மனித உயிர்களுக்கு விடுக்கப்பட்ட சவால். போரபத்தை விலைக்கு வாங்குவது போன்ற செயலாகும்.

இந்த விடுதியும், மதுபானக் கடையும் அண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபானசாலைக்கு, கலால் பகுதியினரும், உள்ளாசத்துறையும் எவ்வாறு அனுமதி வழங்கியது என்று தெரியவில்லை? இந்த மதுபானசாலை அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் இமயானன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை உள்ளது. உப்பாளியம்மன் கோவில் உள்ளது. கோம்பு வைரவர் கோவில் ஒன்றும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக வல்லைவெளி இந்து மயானமும் அமைந்துள்ளது.

எனவே, இவைகளுக்கு மத்தியில் மதுபானக்கடை திறப்பதற்கு எந்தவகையில் அனுமதிப்பத்திரம் வழங்கினார்கள் என்று தெரியவில்லை.

அந்த மதுபானக்கடையைச் சுற்றி வாழும் மக்கள் இது தொடர்பில் தகவல் தரும் போது இந்த மதுபானச்சாலை தாங்கள் இதுவரையில் அனுபவித்து வந்த அமைதியான வாழ்க்கை முறைக்கு பலத்த சவாலாகவுள்ளது, என்றும் ‘‘இந்த கிராமிய சூழலில் வாழும் அமைதியான வாழ்க்கைக்குப் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை பெரும் சவாலாக உள்ளது,” எனவே ‘‘உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மதுபானச்சாலைக்கு வழங்கிய அனுமதியை இரத்துச் செய்யவேண்டும்,” என்றும் கூறினார்கள்.

மேலும், அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பொதுத்தேர்தலின் பிற்பாடு இந்த மதுபானக்கடையை மூடுவதற்கான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.