வல்லை நகர சபையை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு முதலமைச்சர் உத்தரவு

vicky0vickneswaranவல்வெட்டித்துறை நகராளுமன்ற சபையை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த திங்களன்று விடுவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டோருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக அறியவந்தது.

சபை இடைநிறுத்தப்பட்டதால் நகராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முதலமைச்சர் ஒப்படைத்திருக்கின்றார்.

வல்வெட்டித்துறை நகர சபையில் முதல்வர் அனந்தராஜுக்கு எதிராக அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவர் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்தமையை அடுத்து, சபையின் வழமையான செயற்பாடுகளுக்குரிய சம்பளக் கொடுப்பனவு மற்றும் அத்தியாவசிய செலவினங்கள் சபையில் அங்கீகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதனால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கும் சூழலும் உருவானது. இவ்விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் அல்லது சபையைக் கலைத்து விடுங்கள் என்று உள்ளூராட்சிக்குப் பொறுப்பான மாகாண அமைச்சர் என்ற முறையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தாம் கோரினார் என தற்போது இடைநிறுத்தப்பட்ட சபையின் முதல்வர் (நகரபிதா) அனந்தராஜ் தெரிவித்தார்.

தமது கோரிக்கையின் பேரில் சபையை மூன்று மாத காலத்துக்கு இடைநிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அரியநாயகத்தை இந்த விடயத்தை விசாரித்து உரிய பரிந்துரைகளைத் தருமாறு முதலமைச்சர் கோரவுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.