வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நீக்கம்

Valikamam Eastவலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அன்னலிங்கம் உதயகுமாரை பதவி விலகுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாசன் ஜெகூ உத்தியோக பூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் வலி.கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தா சோமராஜ்ஜிற்கு அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழிருக்கும் வலி.கிழக்குப் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, சபையின் 21 உறுப்பினர்களில், 10 உறுப்பினர்கள் எதிராகவும், 9பேர் ஆதரவாகவும் வாக்களித்தமையினால் 1 வாக்குகளால் வரவு – செலவுத்திட்டம் தோல்வியடைந்தது. (இருவர் சமூகமளிக்கவில்லை).

தொடர்ந்து இரண்டாவது வரவு – செலவுத்திட்டம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி மீண்டும் சபையில் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தும் அந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு 12பேர் எதிராகவும், 9பேர் ஆதரவாகவும் வாக்களிக்க, 3 வாக்குகளால் மீண்டும் வரவு – செலவுத் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில், உள்ளூராட்சிச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிலைமையின் போது தவிசாளர் 14 நாட்களின் பின்னர் பதவி நீங்கியதாகக் கருதப்படும் நடைமுறைக்கு அமைய தற்போது உள்ளூராட்சி ஆணையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வலி.கிழக்கு பிரதேச சபைச் செயலாளர், அலுவலக உதவியாளர் ஒருவரை கைதடியில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைச்சிற்கு நேரடியாக அனுப்பி இக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேற்படி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தவிசாளர் உட்பட 16 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.