வறட்சியில் வடமாகாணம், ‘தண்ணீர் அரசியலில்’ கட்சிகள்

இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு ‘தண்ணீர் அரசியல்’ செய்கிறது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டுகிறார்.

lanka_ampara

அரசியல் இலாபங்களுக்காக, மாகாண அரசைத் தவிர்த்து, குடிநீர் விநியோகத்தில் நேரடியாக, தமக்கு சாதகமான வகையில் மத்திய அரசு ஈடுபகிறது என அவர் கூறுகிறார்.

‘மத்திய அரசின் உதவிகள் இல்லை’

வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவை தொடர்பில், மாகாண அரசுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவிகளை வழங்கவில்லை எனவும் ஐங்கரநேசன் கூறுகிறார்.

எனினும் வட மாகாண சபை, நிதி நெருக்கடிகளுக்கு இடையே, தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் விநியோகத்தை செய்து வருகிறது என்றும், கடல் நீரை நன்னீராக மாற்றி விநியோகம் செய்யும் ஒரு திட்டம் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

குறிப்பாக தீவகப் பகுதிகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலைமை ஏனையப் பகுதிகளை விட மோசமாகவுள்ளது எனவு அவர் மேலும் தெரிவித்தார்.

sri_lanka

வட மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள கிணறுகள் முற்றாக வற்றிவிட்டன என்றும், அவசரகால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறும் அவர், மத்திய அரசு மாகாண அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் அன்றாடத் தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்கச் செய்வதில், புலம்பெயர்ந்த தமிழர்கள் தம்மால் இயன்ற உதவிகளை மாகாண அரசின் ஊடாகச் செய்ய முன்வந்தால் அது மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.