வரி அனுமதிப்பத்திர குறுந்தகவல் திட்டம் அறிமுகம்

வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பான நினைவூட்டலை குறுந்தகவல் ஊடாக வழங்கும் சேவையை கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவில் செவ்வாய்க்கிழமை (26) முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள பிரதேச செயலகங்களில் கரவெட்டிப் பிரதேச செயலகத்திலேயே இந்தத் திட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான வாகன வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வரும் போது, அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்படும்.

தொடர்ந்து, அவர்களின் வரி அனுமதிப்பத்திரம் முடிவடையும் காலத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக அவர்களுக்கு நினைவூட்டல் குறுந்தகவல் அனுப்பப்படும்.

இதன்மூலம், வரி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள் சரியான காலத்தில் வரி அனுமதிப்பத்திரத்தைப் பெற்று, சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.