வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்தவும்: ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்

EPDP flagபாதுகாப்பு வலயத்திற்குள் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கிருந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்கு கோவில்களும் கல்லூரிகளும் இடித்து அழிக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதை தடுத்துநிறுத்த ஜனாதிபதி உடனடி உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளது.

பாதுகாப்பு வலயங்களாக உள்ள பகுதிகளில் அங்கு வாழ்ந்த மக்கள் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை எமது உறுதியான நிலைப்பாடாகும். யுத்தத்திற்கு பின்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்கமுடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை கட்டம் கட்டமாக நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகின்றோம்.

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு வெற்றிவாய்ப்பை தருவார்களாக இருந்தால் பலாலி வரை எமது மக்களை மீள்குடியேற்றுவோம் என கூறி இருந்தோம். அதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால்,மாகாண சபை அதிகாரத்தை திறம்பட செயற்படுத்த தெரியாத அல்லது விரும்பாதவர்களின் பொருத்தமற்ற வாக்குறுதிகளுக்கு எடுபட்டு ஆணை வழங்கி எமது மக்கள் நல்லதொரு வாய்ப்பை மீண்டும் இழந்து இருக்கிறார்கள்.

அண்மைக் காலமாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள கோவில்களும் கல்லூரிகளும் குடியிருந்த வீடுகளும் படையினரால் இடித்து அழிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. வீடுகளும் கல்லூரிகளும் உடைக்கப்படுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கோவில்கள் உடைக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளப்போவதில்லை.

கோவில்கள் தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை என்பவற்றை பிரதிபலிக்கும் புனிதத்தளங்களாகவே மதிக்கப்படுகின்றன. ஆகவே கோவில்கள் உடைத்து அழிக்கப்படுவதான செய்திகள் தமிழ் மக்களின் கலாசார அழிப்பாகவும் மதநம்பிக்கைகள் மீதான தாக்குதலாகவும் அமையும். இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களின் மனங்களில் எக்காலத்திலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தும்.

எனவே கோவில்கள், கல்லூரிகள் குடியிருந்தவீடுகள் உடைக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இருக்குமானால் அதனை உடனடியாக தடுத்துநிறுத்த ஜனாதிபதி உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.