வட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

cvk-alunar

இந்த அங்கீகாரம் கடந்த சனிக்கிழமை ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டுக்கான நிதி நியதிச் சட்டத்திற்கும் ஆளுநரின் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமும் 2013 ஆண்டின் முதலாம் இலக்க நிதி நியதிச் சட்டமும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரானால் டிசெம்பர் 12ஆம் திகதி மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மாகாண ஆளுநரின் அங்கீகாரத்திற்காக வரவு–செலவுத் திட்டம் மாகாண பிரதம செயலாளருக்கு மாகாண சபை தவிசாளரினால் அனுப்பிவைக்கப்பட்டது.இந்த நிலையில் வரவு-செலவுத் திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரத்தின் பிரதி மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண சபை தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநரின் அங்கீகாரம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் வடமாகாண சபை செயலகம் மேற்கொண்டு வருவதாக தவிசாளர் தெரிவித்தார்.