வட மாகாண சிறப்புச் செயலணிக் குழு கலைப்பு, அமைச்சர் டக்ளஸ் விளக்கம்

வட மாகாணத் தேவைகளை கவனித்து, வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சிறப்புச் செயலணிக் குழு கலைக்கப்பட்டுள்ளது என்பதை அதன் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தினார்.

dak-thevananthaaa

தற்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ள ஒரு மாகாண சபை, வடக்கே ஆட்சியில் இருப்பதால், இந்தச் சிறப்புச் செயலணிக் குழுவின் பணிகள் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

எனினும், கடந்த பத்து மாதங்களாக அங்கு ஆட்சியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசு, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க விரும்பாமல் இருக்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இரணை மடு நீர் தொடர்பான பிரச்சினை இதற்கு ஒரு உதாரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில், மத்திய அரசின் தரப்பிலிருந்து தடை ஏதும் இருக்குமாயின், அதை விலக்கித்தர தான் சித்தமாகவுள்ளதாகக் கூறும் அவர், வட மாகாணப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக, பொதுமக்கள் மற்றும் ஆளுநர் முன்னிலையில் விவாதிக்கத் தயார் என்று கூறுகிறார்.

மாகாண வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில், தான் சுயநல அரசியல் செய்வதான குற்றச்சாட்டையும் அவர் மறுக்கிறார்.

அந்தச் சிறப்பு செயலணிக் குழு, போர்க் காலம் மற்றும் போருக்கு பின்னரான காலத்தில் வட மாகாணத்தில் பல பணிகளை முன்னெடுத்து வந்தது என்றும் அமைச்சர் கூறுகிறார்.