வட மாகாணம் தழுவிய ரீதியில் முதியோர் கழகங்கள் உருவாகும்! – ஆளுநர்

முதியவர்கள் நன்மைகளை அனுபவிக்கும் பொருட்டு வட மாகாணம் தழுவிய ரீதியில் முதியோர் கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் முதியவர்கள் பெரும் நன்மைகளை அடைய முடியும் – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி.

alunar-chanthera-sri--1

சர்வதேச முதியோர் தினம் நேற்று முதலாம் திகதி கைதடி முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், முதியவர்களுக்கு யாழ். மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் உரிய மரியாதை வழங்குவதில்லை. என முதியவர்கள் பலர் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் எனவே இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரைத் தான் பணித்துள்ளார் என்றும்,முதியவர்களுக்கு விசேடமாக அடையாள அட்டைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

“வட மாகாணத்தில் 18 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன. அவற்றின் பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சிகரமான விடயமாகும். முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்க பயிற்சிகளை செய்வதுடன் நூல்களையும் வாசிக்க வேண்டும்.”

“முதியவர்களின் நலன் கருதி பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக பெரும் தொகைப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் வடக்கு மாகாணம் முழுவதும் முதியோருக்கான கழகங்கள் உருவாக்கப்படும். இவற்றில் உறுப்பினர்களாகி முதியவர்கள் பல நன்மைகளைப் பெற முடியும். இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நாளை (இன்று) வியாழக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறும்” – என்றார்.