வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் திருட்டு -பொலிஸார் விசாரணை

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் தாதியின் அறை உடைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி திருமதி றதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவமனையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் திருமதி சசிகலாராணி விஜயசுகுமார் (வயது-57) என்பவரின் அறையே இவ்வாறு உடைக்கப்பட்டுப் பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் பணியாற்றும் குறித்த தாதிய உத்தியோகத்தர், பிரதி புதன்கிழமை மட்டும் வீட்டுக்குச் செல்வதாகவும் ஏனைய நாள்களில் முழுநேரமும் கடமையில் இருப்பதாகவும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

தனது சம்பளப் பணத்தின் ஒரு தொகை, மருத்துவமனையின் அபிவிருத்திச் சங்கப் பணம், வருட இறுதி ஒன்றுகூடலுக்காக மருத்துவமனை அலுவலர்களிடம் பெற்றுக்கொண்ட பணம், மருத்துவமனையின் இதர பணம் மற்றும் உண்டியல் பணம் என மொத்தம் 1 இலட்சத்து 837 ரூபாய் பணமும் தனது உணவுப் பொருள்களும் திருடப்பட்டுள்ளதாகத் தாதி தெரிவித்தார்.

திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற அன்று இரவு மருத்துவமனைக் காவலாளி, நோயாளர் காவு வண்டிச் சாரதி மற்றும் பணியாளர்கள் இருவர் இருந்ததாகவும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

அதேநேரம், மருத்துவமனையில் கண்காணிப்பு கமரா இன்னமும் பொருத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குணதிலக மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor