வடமாகாண சபையில் அங்கஜனுக்கு பாராட்டு

angajan-wonயாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் ஊடாக சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கு உதவிகளை வழங்கியதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற 6ஆவது அமர்வின் போதே இந்த பாராட்டை விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியாத நிலையில் எமது விவசாயிகள் இருந்தனர்.

இதுதொடர்பில் விவசாய அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து இதனை சந்தைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்காக அங்கஜனோடு தொடர்பு கொண்ட போது, அவர் உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் ஊடாக சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனால் வடமாகாண விவசாய அமைச்சின் சார்பிலும் வடமாகாண விவசாயிகள் சார்பிலும் அங்கஜனுக்கு நான் பாராட்டையும் நன்றிகளையும் இந்த சபையில் தெரிவிக்கின்றேன்’ என்றார்.

இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், ‘சரியாகச் செய்தால் நன்றி! ஊழல் செய்தால் தண்டனை!’ என்று கூறினார்.