வடமாகாண எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kamalநெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷசனின் கொலை வழக்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன், றெக்ஷசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்ததுடன், றெக்ஷசனின் மனைவி ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தினால் 6 தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கமலேந்திரன் சார்பாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகாதபடியால், கமலேந்திரனை மார்ச் 6 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கமலேந்திரனை பிணையில் விடுவிக்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்தபோதும், மேல் நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் சென்றமையினால் குறித்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கமலேந்திரன் சார்பாக மனுவினைச் மன்றில் சமர்ப்பித்த சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார்.

கமலேந்திரனை பிணையில் விடுவிக்குமாறு கடந்த 11 ஆம் திகதி கமலேந்திரனின் சட்டத்தரணியான முடியப்பு ரெமீடியாஸினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவில், ‘கந்தசாமி கமலேந்திரன் நீண்ட காலமாக ஜனநாயக செயற்பாட்டில் ஈடுபட்டு, தற்போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக கடமையாற்றி வருகின்றார். கடந்த 2 மாதங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் தனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் உள்ளதாகவும், ஆதரவாளர்களின் கொள்கைக்கு ஏற்றவாறு மாகாண சபையில் மக்களின் தேவைகளை எடுத்துக்கூற வேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் அன்னலிங்கம் பிரேமசங்கர் மேற்படி பிணை மனுவினை கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் மனு தொடர்பான விசாரணை இன்று 20 ஆம் திகதி நடைபெறும் எனக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.