வடமாகாணசபை – அரசுக்கு இடையில் முறுகல் – யாழ். ஆயர்

வடமாகாண சபையினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாக நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிறிட் லோஷனிடம் தெரிவித்ததாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

ayar-norway

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிறிட் லோஷன் தலைமையிலான குழுவினருக்கும் யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். ஆயர் இல்லத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு கூறியதாகவும் யாழ். ஆயர் கூறினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் யாழ். ஆயர் தெரிவிக்கையில்,

‘நோர்வே குழுவினர் வடமாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் முக்கியமாகக் கேள்வியெழுப்பினர். இதற்கு வடமாகாண சபையினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இதனால், வடமாகாண சபை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவுகின்றது.

மேலும், மாகாண சபையில் முன்வைக்கப்படுகிற பிரேரணைகள் அரசாங்கத்துக்கு கோபம் ஊட்டும் வகையில் அமைவதால் அரசாங்கம் இவர்களுக்கு உதவுவதற்கு முன்வராது. இந்த நிலையில், அரசாங்கத்துடன் இணைந்து போவது போல இவர்களும் நடந்துகொண்டால் மாத்திரமே பலன் கிடைக்கும். இதனையே அரசாங்கமும் விரும்புகிறதெனவும் நான் அவர்களிடம் கூறினேன்.

கடந்த யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியிலும் விசாரிக்கப்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பில் ஜெனீவாவிலும் கோரிக்கை முன்வைக்கப்படுமெனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனரெனவும் கூறினேன்.

இதன்போது கிறிட் லோஷன், விசாரணையினால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்குமென நினைக்கின்றீர்களென என்னிடம் கேட்டார். இதற்கு, கடந்த யுத்தத்தின்போது பெருமளவானோர் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான விசாரணையினால் காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோமெனக் கூறினேன்.

மேலும் யுத்தம் முடிந்த பின்னர் யாழ். மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் மது, போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன், பாலியல் வன்முறைகளும் அதிகரித்துச் செல்கின்றன. இதனால், கல்விமான்கள், பெற்றோர்களென பலரும் கவலையடைந்துள்ளதாகவும் கூறினேன்’ என்றார்.

Related Posts