வடக்கு விவசாயிகளை வெங்காயச் செய்கை கண்ணீர் விட வைக்காது – விவசாய அமைச்சர்

ainkaranesanவெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால், வடக்கு விவசாயிகளை வெங்காயச் செய்கை ஒருபோதும் கண்ணீர் விட வைக்காது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விதை வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாதசுந்தரம் தலைமையில் கைதடியில் வயல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வெங்காயச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த காலத்தில் பொருளாதாரத்தில் மிக உயர்வான நிலையிலிருந்துள்ளார்கள். வெங்காயச் செய்கை மூலமான வருமானத்தில் வீடுகளைக் கட்டிய, வாகனங்களை வாங்கிய விவசாயிகளை எனக்குத் தெரியும். அந்தளவுக்கு இலாபம் ஈட்டக்கூடிய பயிராக வெங்காயம் இருந்துள்ளது.

இருப்பினும், போர் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இப்போதுதான் எமது விவசாயிகள் மீண்டும் நிமிர்ந்தெழ ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் வடக்கில் 78,000 மெற்றிக்தொன் வெங்காயம் செய்கை பண்ணப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரும்பங்கு யாழ்ப்பாணத்தில் செய்கை பண்ணப்பட்டிருக்கிறது. இலங்கையின் மொத்த வெங்காய உற்பத்தியில் எமது விவசாயிகளின் உற்பத்தி அரைவாசிக்கும் அதிகமாகும்.

யாழ்ப்பாணத்தில் விளைகின்ற வெங்காயத்தின் தரம் தென்னிலங்கை வெங்காயத்தை விட உயர்வானது. இங்கு விளைவிக்கப்படுகின்ற வெங்காயங்களுக்கு சந்தை வாய்ப்பு எப்போதும் தென்னிலங்கையில் இருந்துகொண்டே இருக்கிறது. இதனால், வெங்காயச் செய்கையை வடக்கில் அதிகரித்தால் அதிக வருமானத்தை நாங்கள் பெறலாம்.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் புகையிலைச் செய்கையை நம்பியிருந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், உலகளவில் புகைப்பிடித்தலுக்கு எதிரான போக்கு உருவாகியதால் புகையிலைச் செய்கை குறைவடைந்து வருகிறது. அத்தோடு புகையிலையில் பெரிய இலைகள் தோன்றுவதற்காக அதிகளவு நைதரசன் பசளைகளை இடவேண்டியுள்ளது. இந்த நிலையில், எமது நிலத்தடி நீர் மாசுபட்டதற்கு புகையிலைச் செய்கைதான் பெருங் காரணமாகும். இதனால், புகையிலைக்கு மாற்றாக விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய ஒரு பயிராக தற்போது வெங்காயச் செய்கை உள்ளது.

தரமான வெங்காய விதைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இவற்றை இந்தியாவிலிருந்து அதிகம் எடுக்க வேண்டியுள்ளது. இதனால், வடமாகாண விவசாயத் திணைக்களமானது வெங்காய விதைகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விதை வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கின்றது. இது இப்போது கைதடியில் சாத்தியமாகியுள்ளது.

எமது வெங்காயச் செய்கையாளர்கள் மீண்டும் பொருளாதாரத்தில் உயர்வடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு நாம் எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்றார்.

இந்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.