வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்ய புதிய குழு!

வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர்கள் தொடர்பாக தபால் மூலமோ அல்லது நேரிலோ தெரிவிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக தனக்கு நாளுக்குநாள் முறைப்பாடுகள் வந்தவண்ணமுள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நியமித்து அதனூடாகவே விசாரணையை மேற்கொள்வது என்ற ஆலோசனையொன்றை முதலமைச்சர் வடக்கு மாகாண சபை அவையில் முன்வைத்தபோது அமைச்சர்களை வெளியாட்கள் விசாரணை செய்யமுடியாது எனவும், அவர்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர்களே விசாரணை செய்யலாம் எனவும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் உறுப்பினர்களைக் கொண்டு விசாரணை செய்தால் அது பக்கச்சார்பான விசாரணையாகப்போய்விடும் எனவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் நம்பகத் தன்மையான விசாரணைக்கு வெளித்தரப்பினரே நியமிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இக்கோரிக்கை வடக்கு மாகாணசபையால் அங்கீகரிக்கப்பட்டு விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், முன்னாள் நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமேஸ்வரா, முன்னாள் அரச அதிபர் எஸ்.பத்மநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகத்தில் இயங்கும் இக்குழுவானது எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

Recommended For You

About the Author: Editor